தண்ணீரும், ரத்தமும் ஒரே நேரத்தில் பாயாது! அதிரடியை துவக்கியது இந்தியா; இனி கண்ணீர் 'சிந்து'ம் பாக்.,

2

பாகிஸ்தானுடன் சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய கிளை நதி செனாப்பில் தண்ணீரை நிறுத்தியது இந்தியா. அடுத்த கட்டமாக, ஜீலம் நதியில் தண்ணீர் நிறுத்தப்பட உள்ளது. பாகிஸ்தானும், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரும் விரைவில் கடும் வறட்சியை சந்திக்க உள்ளன.

கடந்த 2016ம் ஆண்டு செப்., 18ல், பாகிஸ்தான் கைக்கூலிகளான, நான்கு பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு தாண்டி, இந்தியாவுக்குள் ஊடுருவி, ஜம்மு - காஷ்மீர் உரியில் ராணுவ நிர்வாகப்பிரிவு அலுவலகத்தில், அதிரடி தாக்குதல் நடத்தினர். அப்போது, 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்; 20 பேர் படுகாயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த முதல் ஆயுதம் தான் சிந்து நதி ரத்து குறித்த பரிசீலனை.

'இரு நாடுகள் இடையே நல்லுறவு தேவை எனில், நல்லெண்ணம், பரஸ்பர நம்பிக்கை தேவை. இது ஒரு பக்கம் சார்ந்த நடவடிக்கையாக இருந்தால், நல்லுறவு இருக்காது' என இந்தியா அறிவித்தது.

தொடர்ந்து, 'ரத்தமும், தண்ணீரும் ஒரே நேரத்தில் பாயாது' என, அதிரடியாக அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அன்று முதல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் எத்தனை காலம் நீடிக்கும் என்பதில் ஐயம் இருந்தது.

ஆனால், பாகிஸ்தான், நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போல், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து கொண்டே இருந்தது. 2019ல், பதான்கோட்டில், பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி, 40 ராணுவ வீரர்களை கொன்று குவித்தனர். மீண்டும் தற்போது, ஏப்., 22ல், காஷ்மீர் பஹல்காமில், அப்பாவி சுற்றுலா பயணியர் 26 பேரை, பெயர், மதம் கேட்டு, சுட்டுக்கொன்றுள்ளனர்.

இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானை 'தண்ணீர் குடிக்க' வைக்கும் நோக்கில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது.

பாக்லிஹார் அணை



முதல் கட்டமாக, சிந்து நதியின் கிளை நதி செனாப்பில் கட்டப்பட்டுள்ள, பாக்லிஹார் அணையில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீரை நிறுத்தியுள்ளது இந்தியா.

ஜம்முவில் ரம்பான் மாவட்டத்தில், செனாப் நதியின் குறுக்கே பாக்லிஹார் அணை கட்டப்பட்டுள்ளது. கடந்த 1999ல் கட்டுமானம் தொடங்கிய பின், பாக்லிஹார் திட்டத்தின் வடிவமைப்பு அளவுகள், 1960ன் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவதாக, பாகிஸ்தான் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக, முன்பு ஒப்பந்தத்துக்கு மத்தியஸ்தம் வகித்த உலக வங்கியிடமும் பாகிஸ்தான் முறையிட்டது.

எனினும், சிந்துவின் கிழக்கு நதிகளின் உரிமை, இந்தியாவுக்கு இருப்பதால், இந்தியா தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. 2008ம் ஆண்டு அணை கட்டுமானம் முடிந்து திறக்கப்பட்டது. இந்த அணையில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும், தண்ணீர் தற்போது அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

கிஷன்கங்கா அணை



அடுத்த கட்டமாக, ஜீலம் நதியில் உள்ள கிஷன்கங்கா அணையில் இருந்தும் தண்ணீர் நிறுத்தப்பட உள்ளது. காஷ்மீர் வடக்கு பகுதியில், பந்திபோரா அருகில் தர்மஹாமா எனும் இடத்தில், ஜீலம் நதியில் கிஷன் கங்கா அணை உள்ளது. பாக்லிஹார், கிஷன்கங்கா இரண்டும் பெரிய அளவிலான நீர்மின் திட்டங்கள் கொண்ட அணைகள்.

கிஷன்கங்கா திட்டத்தில் தண்ணீர் நிறுத்தப்பட்டால், பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் பாதிப்பு ஏற்படும். பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைநகர் முஸாபராபாத்தில் உள்ள நீலம் --ஜீலம் அணை வறட்சியை சந்திக்கும். அங்கு மின்சார உற்பத்தியும் அடியோடு பாதிக்கும்.

பாகிஸ்தானின் வளம் கொழித்த பகுதிகள், கடும் வறட்சியில் வாடும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான். ஆனால், பாகிஸ்தானுக்கு இனி தண்ணீர் குடிக்கவும் வழி இல்லை!




ஒப்பந்தம் - ஒரு பார்வை

வற்றாத ஜீவ நதி சிந்து, திபெத் கைலாஷ் மலைத்தொடரில், மலை நீரூற்றுகளில் உற்பத்தியாகிறது. காஷ்மீர் வழியாக வடமேற்கில் பாய்ந்தோடுகிறது. 3,180 கி.மீ., நீளம் கொண்டது. l இந்தியா- - பாக்., இடையே, 1960 செப்., 19ல் கராச்சியில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு - பாக்., அதிபர் அயூப் கான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.l இந்தியாவுக்கு சிந்து நதி திட்டத்தில், கிழக்கு நதிகளான -சட்லெஜ், பியாஸ் மற்றும் ரவி நதிகளின் நீர் கிடைக்கும். l பாகிஸ்தானுக்கு மேற்கு நதிகளான- சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகளில் இருந்து தண்ணீர் கிடைக்கும்.l சிந்து நதி அமைப்பிலிருந்து இந்தியாவுக்கு 20 சதவீதம்; பாகிஸ்தானுக்கு, 80 சதவீத நீர் கிடைக்கிறது.l இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின், இரு நாடுகள் இடையே 1965, 1971, 1999ல் மூன்று போர்கள் நடந்தன. அப்போதெல்லாம் தாக்குப்பிடித்த இந்த ஒப்பந்தம், முதல் முறையாக தற்போது இந்தியாவால் ரத்து செய்யப்பட்டுள்ளது.



-நமது நிருபர்-

Advertisement