காவித்தண்டலம் பள்ளியில் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் மீண்டும் அமைக்க கோரிக்கை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காவித்தண்டலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில், 25 ஆண்டுக்கு முன் மண்ணால் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இருந்தது. இந்த சுற்றுச்சுவர் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது.

அதன் அருகே பள்ளி மாணவர்கள் அவ்வப்போது விளையாடி வந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் விபத்தில் சிக்கும் சூழல் இருந்தது.

அதை தவிர்க்க, இரண்டு மாதத்திற்கு முன் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது. தற்போது, பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து திறந்தவெளி மதுக்கூடமாக மாற்றி வருகின்றனர்.

மேலும், பள்ளிக்கு அருகே இருக்கும் செடி, கொடிகளில் இருந்து விஷ ஜந்துக்கள் வளாகத்திற்குள் வருகின்றன. எனவே, பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement