வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

சூலுார்; சூலுார் தையல் நாயகி உடனமர் வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில், பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில் சின்னக் குளக்கரை அருகே அமைந்துள்ள, தையல் நாயகி உடனமர் வைத்தியநாத சுவாமி கோவிலில் வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்து, கடந்த, 2ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள், யாகசாலையில் நிறுவப்பட்டு, மூல மந்திர ஹோமங்களுடன் முதல் கால ஹோமம் மற்றும் பூர்ணாகுதி நடந்தது.

நேற்று முன்தினம் காலை, இரண்டாம் கால ஹோமம் மற்றும் அஷ்ட பந்தன மருந்து சாற்றுதலும் நடந்தது. மாலை மூன்றாம் கால ஹோமம் நடந்தது.

நேற்று காலை, நான்காம் கால ஹோமம் துவங்கியது. புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. விமான,கோபுர கலசங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் வைத்தியநாத சுவாமிக்கும் தையல்நாயகி அம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.

சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். ஆன்மீக ஆன்றோர்கள், திருப்பணி குழுவினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். மகா அபிஷேகம், மகா தீபாராதனை முடிந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement