துருக்கியின் வலையில் சிக்க காத்திருக்கும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு

2

ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை துருக்கி அதிபர் எர்டோகன் எடுத்து வருகிறார்.

அதற்கு முன்பிருந்தே துருக்கி, பாகிஸ்தானுக்கு வானிலிருந்து தாக்குதல் நடத்துவதற்கான ட்ரோன்களை அளித்து வந்துள்ளது.

இது போதாது என, இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்திலும் இந்தியாவிற்கு எதிரான போக்கை அந்நாட்டின் புதிய தலைமை தொடர்ந்து எடுத்து வருகிறது.

'பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்கான பாதையை எங்கள் ராணுவம் அடைத்து விடும்' என, வங்கதேச பிரமுகர் ஒருவர் அறிவித்துள்ளார்.

முக்கிய விஷயம்



இந்த பின்னணியில், நம் நாட்டின் தென் பகுதியில் உள்ள குட்டி நாடான மாலத்தீவு, துருக்கிக்கு அதிக இடம் கொடுத்து வருகிறது என்பது நம் அரசு மற்றும் ராணுவ தலைமை கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாக மாறி உள்ளது.

இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிகரமான இலங்கை பயணத்துக்கு கண் திருஷ்டி பட்டது போல், மாலத்தீவு நடந்து கொள்கிறதோ என்ற சந்தேகம் மீண்டும் துளிர்விட்டுள்ளது.

எங்கோ இருக்கும் துருக்கி நாட்டிலிருந்து, ஒரு பழைய கடற்படை கப்பலை அன்பளிப்பாக பெற்றதன் வாயிலாக, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, துருக்கி நாட்டிற்கு இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் மேலும் ஒரு அன்னிய சக்திக்கு இடமளிக்கிறார் என்ற கவலை எழுந்துள்ளது.

பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின் போது, இரண்டு நாடுகளும் முதன் முறையாக ராணுவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.

அதனை தொடர்ந்து மாலத்தீவுடனும், இரு நாடுகளும் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு தோன்றியிருந்தது.

ஆனால், அந்த நம்பிக்கையை சீர் குலைப்பது போல், மாலத்தீவு அரசு செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு துவக்கத்தில் அதிபராக பதவியேற்றதும், முதல் வெளிநாட்டு பயணத்திற்கு துருக்கியை தேர்ந்தெடுத்ததன் வாயிலாக, முகமது முய்சு, தன் வெளியுறவு கொள்கை குறித்து சமிக்ஞை கொடுத்திருந்தார்.

அவருக்கு முந்தைய மாலத்தீவு அதிபர்கள் அனைவரும், அதிபராக பதவியேற்றதும், தங்கள் முதல் வெளிநாட்டு பயணத்துக்கு இந்தியாவைத் தான் தேர்வு செய்தனர்.

துருக்கியை தொடர்ந்து, முகமது முய்சு சீனா சென்றார். சில மாதங்கள் கடந்த பின்பே, அவர் இந்தியாவுக்கு வந்தார். போதாதற்கு, சீனாவுக்கு சென்று வந்த பின், மாலேயில் பத்திரிகையாளர்களை சந்தித்த முகமது முய்சு, இந்தியாவை பெயர் சொல்லாமலே தாக்கி பேசினார்.

மாலத்தீவுக்கு இந்தியா அளித்த ஒரு விமானம் மற்றும் ஹெலிகாப்டரை திருப்பி கொடுக்கப் போவதாக அறிவித்தார்.

இதற்கிடையே, மோடியும், முய்சும் துபாயில் சந்தித்ததை தொடர்ந்து நடந்த இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் வாயிலாக இந்த பிரச்னைக்கு முடிவு காணப்பட்டது.

தற்போது அந்த இரண்டு விமானங்களையும், இந்தியாவை சேர்ந்த சிவிலியன் விமானிகள் இயக்கி வருகின்றனர்.

இதற்கு முன் அவற்றை இந்திய ராணுவத்தினர் இயக்கி வந்தனர்; காரணம், மாலத்தீவு ராணுவத்துக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளித்தாலும், அவ்வாறு பயிற்சி பெற்ற விமானிகள், தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வெளி நாடுகளில் அதிக சம்பளத்திற்கு சென்று விடுகின்றனர்.

ஆனாலும், மாலத்தீவின் கடல் பிராந்தியத்தை கண்காணிக்கும் பணியை இந்திய விமானங்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதில் முகமது முய்சு உறுதியாக இருந்தார்.

அதற்காக, துருக்கியிடம் இருந்து பெற்ற மூன்று ட்ரோன்கள் இப்போது பயன்பாட்டில் உள்ளன. அதனை தொடர்ந்தே, தற்போது இந்த துருக்கி கப்பல் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது, மாலத்தீவு கடலோர காவல்படையினரிடம் இந்தியா அன்பளிப்பாக கொடுத்த ஒரு கப்பல் மட்டுமே பணியில் உள்ளது.

இந்திய கப்பலை விட பெரிதானதும், பழமையானதுமான துருக்கி கப்பலை இயக்க அதிக அளவில் டீசல் தேவைப்படும். அதனை இயக்க, மாலத்தீவின் பொருளாதரா நிலைமை தற்போதைக்கு தாங்காது.

அச்சுறுத்தல்



மேலும், மாலத்தீவின் கடல் பிராந்தியத்தில் எதிரிகள் என குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் யாரும் அந்த நாட்டிற்கு இல்லை.

பிரச்னைகள் எல்லாம், சீனா, பாகிஸ்தான் போன்ற இந்தியாவின் எதிரி நாடுகளால் தான். ஆனால், அந்த நாடுகளுடனும் தற்போதைய மாலத்தீவு அரசு கொஞ்சி குலாவுகிறது.

எது எப்படியோ, மாலத்தீவின் புதிய ராணுவ நகர்வுகளால் அண்டை நாடுகளான இந்தியாவிற்கோ, ஏன் இலங்கைக்கோ எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படப்போவதில்லை.

அதே சமயம், மாலத்தீவை முன்னால் வைத்து, இந்திய பெருங்கடலில் புதிய நகர்வுகளை துருக்கி முன்னெடுக்க முயற்சிக்கிறது.

இதே தந்திரத்தைத் தான், மாலத்தீவு, இலங்கை மற்றும் இந்தியாவின் வடக்கில் உள்ள அண்டை நாடுகள் வாயிலாக சீனா கையாள்கிறது. கடந்த ஆண்டு சீனாவின் கடல் ஆராய்ச்சி கப்பல் என்ற பெயரில், அவர்களது உளவு கப்பல்கள் இலங்கையிலும், மாலத்தீவிலும் நங்கூரமிட்டன.

பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை தொடர்ந்து, அந்த கவலை வெகுவாக குறைந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏன், அந்த பயணத்தை தொடர்ந்து, பாகிஸ்தானின் ராணுவ கப்பலுடன் மேற்கொள்ளவிருந்த பயிற்சியை கூட இலங்கை ரத்து செய்தது.

துருக்கியில் இருந்து மூன்று ட்ரோன்களை இலவசமாகவோ அல்லது கடனாகவோ பெற்றுக்கொண்ட மாலத்தீவு அதிபர், ஆழ்கடல் ஆராய்ச்சிக்கான இந்தியாவுடனான ஒப்பந்தத்தை தொடரவில்லை.

ஆனால், அத்தகைய ஆராய்ச்சி தொடர்பான பயிற்சியை மாலத்தீவு அதிகாரிகளுக்கு சீனா அளித்தது.

அதேநேரத்தில், பொருளாதார பிரச்னைகளை தீர்க்க இந்தியாவின் ஆதரவு தொடர்ந்து வேண்டும் என்ற நிலையில், அந்த திட்டம் தற்போது செயலிழந்துள்ளது.

இந்த பின்னணியில், புதிதாக இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்குள் நுழைவதற்கு மாலத்தீவை துருக்கி பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

துருக்கி அதிபர் எர்டோகனின் அடக்குமுறையை எதிர்த்து, அந்த நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்க்கட்சிகள், பொது மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கதேசத்திலும், இலங்கையிலும் அரங்கேறியதைப் போன்ற ஆட்சி மாற்றம் துருக்கியிலும் ஏற்படுவதற்கு இந்த போராட்டம் வழி செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தவிர்க்க முடியாதது



இந்தியாவிற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்த எர்டோகன், அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலை சந்திக்கவுள்ளார்.

இந்த பின்னணியில் எர்டோகனை நம்பி, இந்தியாவுடனான உறவில், மாலத்தீவு அதிபர் நம்பிக்கையின்மையை விதைத்தால், அது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகவே முடியும்.

இதற்கிடையே, இந்தியா -- பாகிஸ்தான் இடையிலான மோதல் போக்கை, துருக்கி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தால், அதில் மாலத்தீவு சிக்கிக்கொள்வது தவிர்க்க முடியாததாகி விடும்.


அப்போது இந்தியாவின் நகர்வுகள், அதற்கு தகுந்த அடி கொடுக்கும் விதமாகவே அமையும்.


என். சத்தியமூர்த்தி

சர்வதேச விவகார ஆய்வாளர்

Advertisement