சும்மா நிற்கிறது 'ரபேல்' காங்., தலைவர் கிண்டல்

4

புதுடில்லி: உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், 'ரபேல்' என எழுதப்பட்ட பொம்மை விமானத்தில் மிளகாய், எலுமிச்சை கட்டி மத்திய அரசை கிண்டல் செய்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த சில தினங்களில், பிரான்ஸ் நாட்டில் இருந்து, 63,000 கோடி ரூபாய் செலவில் கடற்படைக்கான, 26 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.

பிரான்சிடம் இருந்து ஏற்கனவே ரபேல் போர் விமானங்களை நம் விமானப்படை வாங்கியுள்ளது.

இந்நிலையில், உ.பி., மாநில காங்., தலைவர் அஜய் ராய், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பஹல்காமில் நம் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதத்தை நசுக்குவோம் என கூறும் இந்த அரசு வாங்கியுள்ள ரபேல் போர் விமானங்கள், மிளகாயும், எலுமிச்சையும் மாட்டப்பட்டு தளங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களை இந்த அரசு எப்போது தண்டிக்கப் போகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, கையில் ரபேல் என்று எழுதப்பட்ட பொம்மை விமான முன்பகுதியில் மிளகாய், எலுமிச்சை மாட்டிவைத்தபடி அவர் பேட்டி அளித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில், அஜய் ராய் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருப்பது, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement