வணிகர்களிடம் இருந்து மாமூல் வசூலிக்கும் ஆளும்கட்சியினர்; இ.பி.எஸ்., கொந்தளிப்பு

1

சென்னை: ''ஆளுங்கட்சியினரால் வணிகர்களிடம் இருந்து மாமூல் வசூலிக்கப்படுகிறது'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் நடந்த வணிகர் பாதுகாப்பு மாநாட்டில் இ.பி.எஸ்., பேசியதாவது: சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தி.மு.க., ஆதரித்தது. கஞ்சா போதை ஆசாமிகள் வணிகர்களை தாக்குவது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த ஆட்சியில் வணிகர்களுக்கு மட்டுமல்ல யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக உள்ளது.


ஆளுங்கட்சியினரால் வணிகர்களிடம் இருந்து மாமூல் வசூலிக்கப்படுகிறது. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி மலர்ந்த பிறகு வணிகர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும். தி.மு.க., ஆட்சியில் வணிகர்கள் மீதான தாக்குதல் சம்பவம் அதிகரித்துவிட்டது. வணிகர்கள் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு.


தி.மு.க., ஆட்சி வணிகர்களுக்கு எதிரானது. வணிகர்கள் அவர்களது வணிக நிறுவனங்களில் அடிக்கடி தாக்கப்படுவதை ஊடகத்திலும், பத்திரிகைகளிலும் பார்க்கிறோம். தி.மு.க., ஆட்சி எப்பொழுதெல்லாம் வருகின்றதோ, அப்போதெல்லாம் சமூக விரோதிகள் வணிகர்களை தாக்குகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement