பும்ராவுக்கு கிடைக்குமா துணை கேப்டன் பொறுப்பு: சுப்மன் கில் பக்கம் அதிர்ஷ்டம்

மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக பும்ராவை நியமிக்க வாய்ப்பு இல்லை. அடிக்கடி காயம் அடைவது இவருக்கு பாதகமாக உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, 31. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (2024) துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். அடுத்து நடந்த ஆஸ்திரேலிய தொடரின், முதல் டெஸ்டில் (பெர்த்) ரோகித் சர்மா விலகினார். இவருக்கு பதில் கேப்டனாக செயல்பட்ட பும்ரா, அணிக்கு வெற்றி தேடித் தந்தார். 5வது டெஸ்டில் (சிட்னி) மீண்டும் ரோகித் விலக, கேப்டன் பொறுப்பை ஏற்றார் பும்ரா. இப்போட்டியில் முகுகு பகுதி காயத்தால் அவதிப்பட்டார். 3 மாதங்களுக்கு எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியில் இடம் பெறவில்லை. தற்பேதைய பிரிமியர் தொடரில், மும்பை அணிக்காக துவக்கத்தில் சில போட்டிகளில் விளையாடவில்லை.
துரத்தும் காயம்: பும்ரா காயம் அடைவது தொடர்கதையாக உள்ளது. 2022ல் முதுகு பகுதி காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்து கொண்டார். அப்போது, 11 மாதங்கள் கிரிக்கெட்டில் களமிறங்கவில்லை. கீழ் முகுது பகுதியில் வலி, அடிவயிற்றில் பிடிப்பு, விரல் பகுதியில் காயத்தால் அவதிப்பட்டார். அடுத்து, இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஜூன் 20-ஆக.4) இந்தியா பங்கேற்க உள்ளது. இது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான ஆரம்பம் என்பதால், முக்கியத்துவம் பெறுகிறது. இதில் காயம் காரணமாக அனைத்து போட்டிகளிலும் பும்ரா பங்கேற்பது சந்தேகம். இதனால், துணை கேப்டன் பதவி கிடைப்பது கடினம்.
முந்தும் சுப்மன் கில்: டெஸ்ட், ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக ரோகித் சர்மா 38, உள்ளார். இவருக்கு பின் அணியை வழிநடத்தத் கூடிய இளம் வீரர் ஒருவருக்கு துணை கேப்டன் பொறுப்பை வழங்க பி.சி.சி.ஐ., விரும்புகிறது. கோலி, ஜடேஜா, ராகுல் 30 வயதை கடந்து விட்டனர். சுப்மன் கில் 25, ரிஷாப் பன்ட் 27, ஜெய்ஸ்வால் 23, பெயர்கள் அடிபடுகின்றன. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் (50 ஓவர்) இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் இருந்தார். 'டி-20' போட்டிக்கும் இவரே துணை கேப்டனாக உள்ளார். பிரிமியர் தொடரில் குஜராத் அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். இவரை டெஸ்ட் போட்டிக்கும் துணை கேப்டனாக நியமிக்கலாம்.
பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடும் வீரருக்கு துணை கேப்டன் பதவியை வழங்க விரும்புகிறோம். அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாட மாட்டார். ஒவ்வொரு போட்டிக்கும் துணை கேப்டனை மாற்ற முடியாது. 5 போட்டிகளுக்கும் ஒரே கேப்டன், துணை கேப்டன் விளையாடினால் சிறப்பாக இருக்கும்,''என்றார்.
இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில்,''காயத்தில் சிக்கும் பும்ரா விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இங்கிலாந்து தொடரில் இவருக்கு முதல் இரு போட்டிகளில் வாய்ப்பு அளிக்கலாம். பின் ஒரு சிறிய 'பிரேக்' கொடுக்கலாம். நான்கு டெஸ்டில் விளையாடினால் போதும்,''என்றார்.
ரோகித் எப்படி
டெஸ்ட் தொடரில் கடந்த ஆண்டு ரோகித் சர்மா ஏமாற்றினார். நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இழந்தார். இவரது பேட்டிங்கும் எடுபடவில்லை. கடந்த 8 போட்டியில் 164 ரன் (சராசரி 10.93) தான் எடுத்தார். இதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்டில் 31 ரன் மட்டும் எடுத்தார். இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு இவரே கேப்டனாக தொடர வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. அப்போது இன்னொரு சீனியர் வீரர் ஒருவர், கேப்டனாக விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதை பி.சி.சி.ஐ., நிராகரித்துவிட்டது. நீண்ட கால அடிப்படையில் கேப்டனை தேடுவதாக கூறியுள்ளது. பும்ராவுக்கு தலைமை பொறுப்பு கிடைக்காத நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன், எதிர்கால கேப்டன் பதவிகள் சுப்மன் கில்லை தேடி வரலாம்.