நாய்க்கடியால் மேலும் ஒரு சிறுமி உயிரிழப்பு; கேரளாவில் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்

திருவனந்தபுரம் : கேரளாவில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி, உரிய தடுப்பூசிகள் செலுத்தியும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கேரளாவில், நாய்க்கடிக்கு உள்ளான மூன்று குழந்தைகள் பலியான சம்பவம் அரங்கேறி உள்ளது.

கேரளாவில் கொல்லம் மாவட்டத்தின் குன்னிகோடு பகுதியைச் சேர்ந்தவர் பைசல். இவரது மகள் நியா, 6, கடந்த மாதம் 8ம் தேதி, வீட்டின் அருகே விளையாடியபோது சிறுமியின் முழங்கையில் தெருநாய் கடித்தது. வலியால் துடித்த நியாவை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர்.

அங்கு, நாய்க்கடிக்கான ரேபீஸ் தடுப்பூசியை நியாவுக்கு டாக்டர்கள் செலுத்தினர். அதன்பின், புனலுாரில் உள்ள அரசு மருத்துவமனையில் கூடுதல் தடுப்பூசிகளும் அச்சிறுமிக்கு செலுத்தப்பட்டது.

எனினும், சமீபத்தில் நாய்க்கடிக்கு உள்ளான பகுதியில் மிகுந்த வலி ஏற்பட்டதுடன், நியாவுக்கு காய்ச்சலும் ஏற்பட்டது.

இதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நியாவை, அவரது பெற்றோர் அனுமதித்தனர். அங்கு, அச்சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

இதையடுத்து, செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நியா, நேற்று இறந்தார். கேரளாவில், கடந்த ஒரு மாதத்தில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு மூன்று குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.

அவர்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தியும், இறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், ரேபீஸ் தடுப்பூசி மீது எழுந்துள்ள சந்தேகத்தை, டாக்டர்கள் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

நியாவுக்கு, நாய்க்கடியால் ஆழமான காயம் ஏற்பட்டது. நரம்பு அடர்த்தி அதிகம் உள்ள பகுதிகளில் இதுபோன்ற காயங்கள் ஏற்பட்டால், நாம் தடுப்பூசி செலுத்தும் முன் அந்நோயின் தீவிரம் மூளையை வேகமாக பாதிக்கும் சூழல் உருவாகும்.

இதன் காரணமாக, தடுப்பூசியின் பலன் முழுமையாக சென்றடையாது. எனவே, நாய்க்கடியால் எந்த இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது, அதன் தீவிரம் என்ன என்பதை கண்டறிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement