கழிவுநீர் தொட்டிக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து மாணவர் பலி

ஸ்ரீபெரும்புதுார்,
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே, சிறுமாங்காடு கிராமத்தைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவரின் மகன் சஞ்சய், 16. மொளச்சூர் அரசு பள்ளியில் பிளஸ் 2 மாணவர்.

அதே பகுதியில் வசிக்கும் பாக்யராஜ் மனைவியின் அக்கா அலமேலு வீட்டில், கழிவுநீர் தொட்டி கட்டும் பணி, நேற்று முன்தினம் நடந்தது.

பாக்யராஜின் மூத்த மகன் சந்தோஷ் மற்றும் உறவினர்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அருகில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சஞ்சய், கால் தடுமாறி, 5 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்தார்.

இதில் காயமடைந்த சஞ்சயை மீட்ட உறவினர்கள், சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு, சிகிச்சை பலனின்றி சஞ்சய் உயிரிழந்தார். சுங்குவார்சத்திரம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

Advertisement