ராணுவ இணையதளங்களை குறிவைத்து பாக்., இணைய திருடர்கள் தாக்குதல்
புதுடில்லி: நம் ராணுவத்தின் சில இணையதளங்களுக்குள் நுழைந்து, பாகிஸ்தானைச் சேர்ந்த இணைய தகவல் திருடர்கள், முக்கிய தகவல்களை திருடியுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தம், துாதரக உறவு முறிப்பு, விசா நிறுத்தம், இறக்குமதிக்கு தடை என, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதே நேரத்தில், நம் அண்டை நாடான பாகிஸ்தான், எல்லைக்கு அப்பாலில் இருந்து தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்துவது, ஏவுகணைகள் சோதனை நடத்துவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது.
தகவல்கள் திருட்டு
மேலும், இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் என்றும், அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவோம் என்றும் பாகிஸ்தான் கூறி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் 'சைபர்' குற்றவாளிகள், நம் ராணுவத்தின் இணையதளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நம் ராணுவத்தின், ராணுவ இன்ஜினியர் சர்வீசஸ் மற்றும் மனோகர் பரீக்கர் ராணுவ கல்வியியல் மற்றும் பகுப்பாய்வு மையத்தின் இணையதளங்களில் நுழைந்து, தகவல்களை திருடியுள்ளனர்.
இது தொடர்பாக, 'பாகிஸ்தான் சைபர் போர்ஸ்' என்ற அமைப்பு, சமூக வலைதளத்தில் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதைத் தவிர, 'ஆர்மர்டு வெகிக்கிள் நிகம் லிமிடெட்' என்ற நம் ராணுவ பொதுத் துறை நிறுவனத்தின் இணையதளத்துக்குள் நுழைந்து, அதை முடக்கவும் முயன்றனர்.
இந்த இணையத் தகவல் திருட்டின் வாயிலாக, 1,600 பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடியுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, அவர்களுடைய தனிப்பட்ட இணைய பயன்பாட்டு அடையாள குறியீடு மற்றும் ரகசிய குறியீடுகளைத் திருடியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் வாயிலாக சில முக்கிய ராணுவ தகவல்களை இணையத் திருடர்கள் பெற முடியும் என்று கூறப்படுகிறது.
உரிய நடவடிக்கைகள்
இதற்கிடையே, நம் ராணுவத்தின் அனைத்து இணையதளங்களையும், இணையத் திருடர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சில உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பத்திரிகைகளின் நிருபர்களை, எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதிக்கு, பாகிஸ்தான் செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அதாவுல்லாஹ் தரார், நேற்று அழைத்துச் சென்றார்.
''எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டியுள்ள பகுதிகளில், கிராம மக்களே வசிக்கின்றனர். இங்கு பயங்கரவாதிகள் யாரும் இல்லை. இதை நிரூபிக்கவே, நிருபர்களை அழைத்துச் சென்றோம்,'' என, அமைச்சர் அதாவுல்லாஹ் தரார் கூறினார்.
போர்ப்பதற்றம் தீவிரமாக உள்ள நிலையில், பாகிஸ்தான், ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. சிந்து போர் பயிற்சி என்ற பெயரில், இந்த சோதனைகளை அந்நாடு நடத்தி வருகிறது.சமீபத்தில், 450 கி.மீ., துாரத்தில் உள்ள இலக்குகளை தாக்கக்கூடிய, தரையில் இருந்து தரைக்கு இயக்கப்படும், அப்தாலி ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியது.இதற்கு இரண்டு நாள் கழித்து, 120 கி.மீ., துாரத்தில் உள்ள இலக்கை தாக்கும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பதாஹ் என்ற ஏவுகணையை நேற்று சோதித்து பார்த்தது. இதுவும், தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கக்கூடியது.
மேலும்
-
மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்; மின் அதிகாரிகள் இருவர் கைது!
-
அப்பாவி மக்களை கொன்றவர்களை ராணுவம் அழித்துள்ளது: ராஜ்நாத் சிங்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீன் சூட் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
-
இந்திய படைகளுக்கு காங்., முழு ஆதரவு: ராகுல் பேட்டி
-
'ஆபரேஷன் சிந்துார்' குறித்து இந்திய ராணுவம் சொன்ன 10 முக்கிய விஷயங்கள் இவை தான்!
-
எல்லையில் பதற்றம்; மும்பை - பஞ்சாப் லீக் போட்டி மாற்றம்