தொண்டர் தலையில் துப்பாக்கி; விஜய் பாதுகாவலரால் திகில்

16

மதுரை: மதுரை விமான நிலையத்தில் த.வெ.க., தலைவர் விஜயை பார்க்க வந்த தொண்டர் முன், அவரது பாதுகாவலர் துப்பாக்கியை நீட்டினார்.

த.வெ.க., தலைவர் விஜய், தான் நடிக்கும் ஜனநாயகன் சினிமா படப்பிடிப்பை முடித்துவிட்டு, கொடைக்கானலில் இருந்து சென்னை செல்வதற்காக நேற்று மதியம் 12:00 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தார்.

த.வெ.க.,வின் தொண்டர்கள் விமான நிலையத்திற்கு விஜயை பார்க்க வந்தனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

காரில் வந்த விஜய் இறங்கி, விமான நிலையத்திற்குள் செல்ல முயற்சிக்கும் போது, தொண்டர் ஒருவர் போலீஸ் தடுப்புகளையும் மீறி, விஜயை பார்க்கும் ஆர்வத்தில் அவரை நோக்கி பின்பக்கமாக ஓடி வந்தார்.

இதை கவனித்தார், விஜயுடன் வந்த பாதுகாவலர் ஒருவர். உடனே, துப்பாக்கியை எடுத்து அந்த தொண்டர் முன் சுடுவது போல் நீட்டினார்.

ஓடி வந்தவர் விஜய் தொண்டர் என தெரிந்ததால், மற்ற பாதுகாவலர்கள் துப்பாக்கி நீட்டிய பாதுகாவலரை மடக்கி அழைத்துச் சென்றனர்.

பாய்ந்தது வழக்கு



இதற்கிடையே மே 1 சம்பவத்துக்காக, த.வெ.க.,வை சேர்ந்தோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

த.வெ.க., தலைவர் விஜய் மே 1ல் கொடைக்கானலில் படப்பிடிப்பிற்கு செல்ல, மதுரை விமான நிலையம் வந்தார். அன்று அவரை வரவேற்க ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விமான நிலையத்தில் கூடினர்.

விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு இரும்பு தடுப்புகளை சேதப்படுத்தினர். போலீசார் மிகுந்த சிரமத்திற்கிடையே தொண்டர்களை கட்டுப்படுத்தினர்.


இதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலர்கள் தங்கப்பாண்டி, கல்லணை ஆகியோர் தலைமையில் கட்சியினர் சட்ட விரோதமாக கூடி, பயணியரின் வாகனங்களை செல்ல விடாமல் தடுத்ததாக, மூன்று பிரிவுகளில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Advertisement