கொள்முதல் செய்த நெல்லுக்கு ரூ.250 கோடி பாக்கி; விவசாயிகள் தவிப்பு

சென்னை,: டெல்டா அல்லாத மாவட்டங்களில், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ததற்கான நிதியை, தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் விடுவிக்காமல் உள்ளது.
மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ், இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷனில் வழங்கப்படுகிறது.
நடப்பு நெல் கொள்முதல் சீசன், 2024 செப்டம்பரில் துவங்கியது. இது, இந்தாண்டு ஆகஸ்டில் முடிவடைகிறது. நெல் வழங்கும் விவசாயிகளுக்கு, 100 கிலோ எடை உடைய குவின்டால் சாதாரண நெல்லுக்கு 2,405 ரூபாயும், சன்னரக நெல்லுக்கு 2,450 ரூபாயும் குறைந்தபட்ச ஆதரவு விலையாக மத்திய - மாநில அரசுகள் வழங்குகின்றன.
நுகர்பொருள் வணிப கழக அனுமதியுடன், டெல்டா அல்லாத மாவட்டங்களில், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், கூட்டுறவு சங்கங்கள் நேரடி கொள்முதல் நிலையங்களை துவக்கி, நெல் கொள்முதல் செய்கின்றன.
தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் என்பது, மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பு.
நடப்பு சீசனில் இதுவரை 28 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. அதில், தேசிய கூட்டுறவு இணையம், 3.16 லட்சம் டன் கொள்முதல் செய்துள்ளது.
மத்திய அரசு, நெல் கொள்முதலுக்கான மானிய தொகையை, தமிழக அரசின் வாணிப கழகத்திற்கு உடனுக்குடன் விடுவிக்கிறது.
ஆனால், தேசிய கூட்டுறவு இணையத்திற்கு, வாணிப கழகம் பணம் கொடுப்பதில்லை. இதனால், அதன் கொள்முதல் நிலையங்களில் நெல் வழங்கும் விவசாயிகளுக்கு, குறித்த நேரத்தில் பணம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நெல் வழங்கிய விவசாயிகள், அதற்கான பணம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
இது குறித்து, தமிழக நெல் உற்பத்தியாளர் சம்மேளனத்தின் நிர்வாக இயக்குநர் அமுருதீன் ஷேக் தாவுத் அறிக்கை:
மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் மானிய நிதியை, தாங்கள் நடத்தும் கொள்முதல் நிலையங்களில் நெல் வழங்கும் விவசாயிகளுக்கு மட்டும், நுகர்பொருள் வாணிப கழகம் உடனுக்குடன் வழங்குகிறது. ஆனால், தேசிய கூட்டுறவு இணையத்துக்கு பணத்தை விடுவிக்க தாமதம் செய்கிறது. இதுவரை, 250 கோடி ரூபாய் அளவுக்கு விடுவிக்கப்படாமல் நிலுவை உள்ளது.
தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு முன்கூட்டியே பணம் செலுத்த முடியாது என்று வாணிப கழகம் கூறுகிறது. மத்திய அரசால் வாணிப கழகத்திற்கு முன்கூட்டியே தரப்பட்ட நிதியில் இருந்து தான், நாங்கள் கேட்கிறோம். வாணிப கழக நடவடிக்கை, கூட்டுறவு இணைய கொள்முதலை முடக்குவதாக உள்ளது.
கூட்டுறவு இணையத்திற்கு, நெல் கொள்முதலுக்கான நிதியை வழங்க, வாணிப கழகம் மறுத்துள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
விவசாயிகளுக்கு உரிய நேரத்தில், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் பணம் வழங்காமல் இருப்பதால், விவசாயிகள் ஏதேனும் போராட்டம் நடத்தினால், அதற்கு கூட்டுறவு இணையமோ அல்லது தமிழக நெல் அரிசி உற்பத்தியாளர் சம்மேளனமோ பொறுப்பில்லை.
இந்த பிரச்னையை தீர்க்க, முதல்வரும், உணவு துறை அமைச்சரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
தொட்டபெட்டா சிகரத்துக்கு வந்த காட்டு யானையால் பரபரப்பு; வெளியேற்றப்பட்ட சுற்றுலா பயணிகள்
-
பந்தலுாரில் வீடுகள், காரை சேதப்படுத்தி சென்றது யானை; தமிழக - கேரள எல்லையில் மக்கள் மறியல்
-
சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் குறித்து அறிவிக்க வேண்டும்: வானதி
-
பந்தலுாரில் இரு வீடுகள், காரை சேதப்படுத்திய யானை; தமிழக- கேரள எல்லையில் மக்கள் சாலை மறியல்
-
பந்தலுாரில் இரு வீடுகள், காரை சேதப்படுத்திய யானை; தமிழக- கேரள எல்லையில் மக்கள் சாலை மறியல்
-
சிகிச்சையில் இருந்த பெண்ணும் பலி