பயங்கரவாதிகளுக்கு உதவிய இளைஞர்; விசாரித்தபோது ஆற்றில் குதித்து பலி

புதுடில்லி : ஜம்மு - -காஷ்மீரின் பஹல்காமில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
பாக்., பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து போன்ற உதவிகளை வழங்குபவர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்து வருகின்றனர்.
குல்காம் மாவட்டத்தின் தங்மார்க்கை சேர்ந்த இம்தியாஸ் அகமது மேக்ரே, 23, என்ற இளைஞர், போலீசிடம் சிக்கினார். அவரிடம் விசாரித்தபோது, பயங்கரவாதிகளுக்கு உணவு வழங்கியதோடு, தங்குவதற்கு இடம் கொடுத்ததாகவும், அவர்களுக்கு தேவையான மற்ற வசதிகளை செய்து கொடுத்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் இடம் தெரியும் என்றும் கூறினார். அவரை அழைத்துக் கொண்டு, போலீசாரும், ராணுவத்தினரும் கூட்டாக சென்று, வெஷாவ் ஆற்றையொட்டிய பகுதியில் நேற்று முன்தினம் காலை தேடுதல் வேட்டை நடத்தினர்.
ஜீலம் ஆற்றின் துணை ஆறான வெஷாவையொட்டிய உயரமான மலைப்பகுதியில், அனைவரும் நின்றிருந்தபோது, திடீரென வெஷாவ் ஆற்றுக்குள் இம்தியாஸ் குதித்தார்.
பாறைகளுக்கு இடையே குதித்த அவர், ஓடும் ஆற்றில் நீந்தி தப்பிக்க முயன்றார். ஆனால், ஆற்றில் தண்ணீர் வேகமாக சென்றதால், அவரை இழுத்துச் சென்றது.
தண்ணீரில் மூழ்கி இம்தியாஸ் உயிரிழந்தார். இந்த காட்சிகள் அனைத்தையும் ராணுவத்தினர், 'ட்ரோன்' கேமராவில் வீடியோவாக பதிவு செய்தனர்.
இதற்கிடையே, ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட உள்ளூர் இளைஞர், சடலமாக மீட்கப்பட்டது சந்தேகத்தை எழுப்புவதாக ஜம்மு--காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி விமர்சித்தார்.
இதையடுத்து, ஆற்றுக்குள் இம்தியாஸ் குதிக்கும் வீடியோவை நேற்று வெளியிட்ட ராணுவம், இளைஞரின் மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டது.