தீவிரவாத தாக்குதலை கண்டித்து மாவட்டத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்


நாமக்கல்:

காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை கண்டித்தும், இதற்காக தமிழகத்தில் நடக்கும் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுத்து, பா.ஜ.,வினர் மீது பொய்வழக்கு போடும், தமிழக அரசை கண்டித்தும், கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


மாவட்ட பா.ஜ., தலைவர் சரவணன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, நகர தலைவர் தினேஷ்குமார், மாநில விவசாயிகள் பிரிவு துணைத்தலைவர் சத்தியபானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் கோபிநாத், முன்னாள் இளைஞரணி தலைவர் கமலக்கண்ணன் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலா பயணிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், தீவிரவாத செயல்களை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாவட்ட பொது செயலாளர்கள் ரவி, முத்துக்குமார், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோல், திருச்செங்கோட்டில், நாமக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து
கொண்டனர்.

Advertisement