அடிப்படை வசதியே இல்ல... 'ஆதார்' எதற்கு? கலெக்டர் ஆபீசில் தரையில் வீசிய மக்கள்

ஈரோடு:சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று ஆதார் கார்டுகளை தரையில் வீசி, போராட்டத்தில் ஈடுபட்டு, மனு வழங்கி கூறியதாவது:


ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.என்.புதுார் அருகே சூரியம்பாளையம் பகுதியில் அன்னை தெரசா நகரில், 18 ஆண்டுக்கு மேலாக அடிப்படை வசதியின்றி வசிக்கிறோம். 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளோம். கழிப்பிடம், சாக்கடை வசதி, குடிநீர் இணைப்பு, மின்சாரம் ஏதுமில்லை. ரேஷன் கார்டு, ஆதார் கார்டு பெற்று, கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமான நிலம், வீடு இல்லாததால், மோசமான சூழலில் வாழ்கிறோம்.


எங்களுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு கூறினர்.முன்னதாக இவர்களை, கலெக்டர் அலுவலக கூட்ட அறைக்குள் சென்று மனு கொடுக்க போலீசார் அனுமதிக்கவில்லை. ஒரு சிலர் மட்டும் செல்லலாம் என்றதால், கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு திரும்பினர். மனு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டை தரையில் வீசிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, முக்கிய நபர்களை உள்ளே அழைத்து சென்று மனு வழங்க செய்தனர். ஆனாலும் தரையில் போட்ட தங்களது மனு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டை மக்கள் எடுக்க மறுத்து விட்டனர். இதனால் குறைதீர் நாள் கூட்ட அறை ஊழியர் வந்து, மொத்தமாக எடுத்து சென்றார்.

Advertisement