நில அளவைக்கு அடிப்படையான 'புள்ளி'யை புராதன சின்னமாக பாதுகாக்க வேண்டும் நிலஅளவைத்துறை அலுவலர்கள் வலியுறுத்தல்

மதுரை : நவீன நிலஅளவைக்கு முன்னோடியான 'கிரேட் டிரைகோணோமெட்ரிக்கல் ஸ்டேஷன்கள்' (ஜி.டி.எஸ்.,) எனப்படும் 'பெரிய முக்கோண புள்ளிகளை' புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என அலுவலர்கள் வலியுறுத்துகின்றனர்.

நில அளவை செய்வதில், 'சர்வே ஆப் இந்தியா' முதன்முதலில் 'ஜி.டி.ஸ்டேஷன்' எனப்படும் 'பெரிய முக்கோணங்களை' அமைக்கும் பணியை துவக்கியது. 1802 ல் அப்போதைய கர்னல் வில்லியம் லாம்ப்டன் சென்னையில் தாமஸ் மவுண்ட் பகுதியில் இருந்து முதல் முக்கோண பரப்பு அளவையை துவக்கினார். இதேபோல தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கற்பனையாக 'பெரிய முக்கோணங்களை' உருவாக்கி, அதற்கான நிரந்தர புள்ளிகளை அமைத்து 'ஜி.டி.ஸ்டேஷன்' என பெயர் வைத்தார்.

அவரைத் தொடர்ந்து கர்னல் எவரெஸ்ட் அப்பணியை செய்து இமய மலைச் சிகரத்தில் முடித்தார். நிலஅளவைத்துறையை நினைவுபடுத்தும் வகையில் அவரது பெயரே அந்தச் சிகரத்திற்கும் இடப்பட்டது. இதுவே இந்திய வரைபடத்தின் முன்னோடி.தமிழகத்தில் இவ்வாறு அவர்கள் 187 இடங்களில் இதுபோன்ற பெரிய முக்கோணங்களாக ஜி.டி.ஸ்டேஷன் எனும் புள்ளிகள் அமைந்துள்ளன. அவற்றில் தேனி மாவட்டம் மேகமலையின் கோவர்மலையில் 'மகாராஜா மெட்டு' என்ற இடத்தில் முருகன் கோயில் பின்புறம் ஒரு ஜி.டி.ஸ்டேஷன் எனப்படும் புள்ளி கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது.

தற்காலத்தில் சர்வே ஆப் இந்தியா அமைப்பு, அனைத்து மாவட்டங்களிலும் தரைத் தளத்தில் 'கிரவுண்ட் கன்ட்ரோல் பாயின்ட்' என வடிவமைத்து அதன்மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. அதனடிப்படையில் 74 சி.ஓ.ஆர்.எஸ்., (கிராஸ் ஆரிஜின் ரிசோர்ஸஸ் ஷேரிங்) எனப்படும் நிரந்தர புள்ளிகளை உருவாக்கியுள்ளது.

உயரமான ஜி.டி.ஸ்டேஷன்

தமிழ்நாடு நிலஅளவைத்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் மகேந்திரகுமார் கூறியதாவது: இந்திய நிலஅளவையின் தாயகமாக தமிழகம் உள்ளது.

நில அளவைத்துறை அலுவலர்கள் தேனி மாவட்டத்தில் உயரமான ஜி.டி.ஸ்டேஷன் எனும் புள்ளியை கண்டறிந்துள்ளோம். அதனை சுத்தம் செய்து பலருக்கும் அறிமுகம் செய்யப்பட்டது.

நிலஆவணங்களுக்கு 'அ' பதிவேடு அடிப்படையாக உள்ளது போல, வருங்கால நிலஅளவைக்கு இது தாய்ப்புள்ளியாக இருக்கும். எனவே இதை புராதன சின்னமாக பாதுகாக்க வேண்டும். இதில் முதன்முதல் சர்வே பணி செய்த கர்னல் வில்லியம் லாம்ப்டன், கர்னல் எவரெஸ்ட் சிலைகளை நிறுவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement