காலியிடத்திற்கு வரி விதிக்க லஞ்சம் மாநகராட்சி ‛பில் கலெக்டர்' கைது

திருப்பரங்குன்றம் :திருப்பரங்குன்றத்தில் காலியிடத்திற்கு வரி விதிக்க ரூ. 9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதுரை மாநகராட்சி பில் கலெக்டர் கைது செய்யப்பட்டார்.

திருப்பரங்குன்றம் கீழரத வீதி வங்காளம் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். பாம்பன் நகரில் உள்ள இவரது இடத்தில் வீடு கட்டுவதற்காக காலியிட வரி விதிப்பிற்காக மனு செய்திருந்தார். அந்த மனு மதுரை மாநகராட்சி பில் கலெக்டர் சிவகுமார் என்பவரிடம் வந்துள்ளது.

15 நாட்களாககார்த்திகேயனை சிவகுமார் அலையவிட்டுள்ளார். இறுதியில் சிவக்குமார் ரூ. 9 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கார்த்திகேயன் புகார் செய்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரைப்படி, சிவகுமாரிடம் பணத்தை தருவதாக கார்த்திகேயன் கூறியுள்ளார்.

லஞ்ச பணத்தை பிரச்னையின்றி பெற நினைத்த சிவகுமார், முதலில் பசுமலைக்கும் அடுத்ததாக திருப்பரங்குன்றம் உள்பட ஐந்து இடங்களுக்கும் கார்த்திகேயனை மாறி மாறி வரக்கூறியுள்ளார். இறுதியாக ஹார்விபட்டியில் ஒரு டீக்கடைக்கு வருமாறு கூறியுள்ளார்.

ஹார்விபட்டி டீக்கடையில் நின்றிருந்த சிவகுமாரிடம், கார்த்திகேயன் ரூ. 9 ஆயிரத்தை கொடுத்தார்.

அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. சத்தியசீலன், இன்ஸ்பெக்டர்கள் சூரியகலா, பாரதி பிரியா, ரமேஷ்பாபு ஆகியோர் ரூ. 9 ஆயிரம் பணத்துடன் சிவகுமாரை கைது செய்தனர்.ஹார்விபட்டியுள்ள மாநகராட்சி வசூல் மையத்திலும் சோதனை நடத்தினர்.

Advertisement