காஷ்மீரில் 6 நீர்மின் நிலைய பணிகள் துவக்கம்? சிந்து நதி ஒப்பந்தம் ரத்தால் மத்திய அரசு வேகம்

1

புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததை தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரில் ஆறு நீர்மின் நிலைய திட்டங்களை விரைவாக முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.

அதில், இந்தியா - பாக்., இடையே, 1960ல் கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் அறிவிப்பு பாகிஸ்தானுக்கு பேரிடியாக விழுந்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஜம்மு - காஷ்மீரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆறு நீர்மின் நிலைய பணிகளை மீண்டும் துவங்கி விரைவில் முடிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இந்த வாரத்தில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
Latest Tamil News

போதிய அளவு நீர்



இதில் நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், மின்துறை அமைச்சர் மனோகர்லால் கட்டார், வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த நீர்மின் நிலைய திட்டங்களை விரைந்து முடித்தால், 10,000 மெகாவாட் மின்சாரம் ஜம்மு - காஷ்மீரில் உற்பத்தி செய்யப்படும். மேலும், நிலப்பரப்பு பகுதிகளில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு போதிய அளவு நீர் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்படி, அந்த ஆறு நதிகள் பாயும் வழித்தடத்தில் இந்தியா புதிய திட்டங்களை செய்ய இருந்தால், ஆறு மாதங்களுக்கு முன்னரே பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அளித்து ஒப்புதல் பெறுவது அவசியம்.

தற்போது இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் அதற்கான தேவை இல்லை. செனாப், ஜீலம் நதியில் கூட புதிய திட்டங்களை மத்திய அரசு துவக்க முடியும்.

ஐந்து வெடிகுண்டுகள்



இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் முழுதும் பயங்கரவாத ஒழிப்பு வேட்டையை நம் ராணுவம் முடுக்கிவிட்டுள்ளது.

பூஞ்ச் மாவட்டத்தின் சுரான்கோட் பகுதியில் ராணுவமும், ஜம்மு - காஷ்மீர் போலீசும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, ஹரி மாரோட் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்தனர்.

அங்கிருந்து, ஐ.இ.டி., எனப்படும் அதிசக்தி வாய்ந்த ஐந்து வெடிகுண்டுகள், ரேடியோ தகவல் தொடர்பு சாதனங்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

எந்தெந்த மின் நிலையங்கள்?

1. ராம்பன் - உதாம்பூர் மாவட்டங்களில் செனாப் நதி மீதான சாவல்கோட் திட்டம் - 1,856 மெ.வாட் 2. பகால் துல் - 1,000 மெ.வாட்3. ராட்டல் - 850 மெ.வாட்4. புர்சார் - 800 மெ.வாட்5. கிரு - 624 மெ.வாட்6. கிர்தாய் 1 மற்றும் 2 - 1,320 மெ.வாட்



செல்பி எடுக்க மக்கள் ஆர்வம்

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் செல்லும் பாக்லிஹார் அணையின் மதகுகள் மூடப்பட்டன. இது, செனாப் நதியின் கீழ்நோக்கிய நீரோட்டத்தை வெகுவாக குறைத்துள்ளது. இதனால், செனாப் நதியின் ஆர்ப்பரிக்கும் நீரில் மூழ்கி கிடந்த ராம்பன் மாவட்ட பகுதிகளில் இதுநாள் வரை காணக் கிடைக்காத செனாப் நதியின் பாறைகளை பார்க்க முடிகிறது. இதனால், மக்கள் அப்பகுதியில் குவிந்து ஆர்வமாக செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.

Advertisement