விளைநிலங்களில் வன விலங்குகளால் சேதத்தை தவிர்க்க விவசாயிகள் எதிர்பார்ப்பு:

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, தேவதானம், சேத்துார், சுந்தரராஜபுரம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய மலை அடிவார பகுதிகள் மேகமலை புலிகள் காப்பக பகுதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
இந்நிலையில் மலையில் இருந்து அடிவார பகுதி தோப்புகளில் யானைகள் புகுந்து சேதப்படுத்தும் செயல் சமீப காலமாக தொடர்ந்து வருவதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தரிசாக இருந்த மலை அடிவார பட்டா நிலங்களில் மலை ஒட்டிய பகுதி வரை யானைகளை ஈர்க்கும் உணவுகளான பலா, வாழை, மா உள்ளிட்ட பழ வகைகளை பயிரிடுவதாலும் ஏற்கனவே இவற்றின் வழித்தடங்களை மறைத்து பாதுகாப்பு என்ற பெயரில் வேலி அமைத்து தடை ஏற்படுத்துவது போன்ற காரணங்கள் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக முகாமிட்டுள்ள யானைகள் மலைப்பகுதிக்கு மீண்டும் வெளியேறவில்லை. இவை பல குழுக்களாக பிரிந்து சேதம் ஏற்படுத்தி வருவது வனத்துறையினருக்கு சவாலாக உள்ளது. இருப்பினும் விளை நிலங்களை பாதுகாக்க யானைகள் மலைப்பகுதியில் இருந்து வெளியேறுவதை தடுக்க வனத்துறையினர் அதிக இடங்களில் அகழி ஏற்படுத்துவதுடன் இவற்றை தொடர் பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும்.
சோலார் மின் வேலி அமைப்பது குறித்து 2023ல் மின்வாரியமும், வனத்துறையும் இணைந்து ஆய்வு செய்து சாத்திய கூறுகளை வழங்கிய பின்னரே இதற்கு அனுமதி வழங்குவது போன்ற தாமதத்தினால் பாதிப்பு அதிகரிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். வனத்துறையினர் தரப்பில் யானைகள் தடுப்புக்காக நிதி உதவி பற்றாக்குறை ஆறு, ஓடை போன்ற யானைகள் ஊடுருவும் பகுதியில் துாண்கள் அமைத்து தடுப்பு ஏற்படுத்த ஒதுக்கீடும், ஒப்புதலும் கிடைப்பதில்லை என்ற நிலை உள்ளது.
இதுபோன்ற பிரச்சனைகளால் ராஜபாளையம் தம்பாத்து ஊரணி, அய்யனார் கோயில், ராக்காச்சி அம்மன் கோயில் பீட், சேத்துார் வாழவந்தான் குளம், நச்சாடைப்பேரி கண்மாய் போன்ற பகுதிகளில் யானைகள் பல குழுக்களாக பிரிந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது மாம்பழ சீசன் உச்சத்தை எட்டி உள்ளதால் பாதிப்பும் அதிகம். வரையாடு கணக்கெடுப்பிற்காக ஊழியர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் சிக்கல் அதிகம் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளின் தொடர் பாதிப்பை அரசு கவனத்தில் கொண்டு யானைகள் புகும் நடவடிக்கையை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு விரைந்து ஒப்புதல் வழங்கி பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
மேலும்
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்