பட்டா மாறுதல் செய்ய வந்தவரிடம் ரூ.1.07 லட்சம் மோசடி; ஹிந்து இளைஞர் முன்னணி நிர்வாகி கைது

உத்தமபாளையம்: பட்டா மாறுதல் செய்து தருவதாகவும், தான் தாசில்தார் என்றும் ரூ.1.07 லட்சத்தை மோசடி செய்தாக மாவட்ட ஹிந்து இளைஞர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ராம்செல்வாவை 27, உத்தமபாளையம் போலீசார் கைது செய்தனர். ஹிந்து முன்னணி நகரத் தலைவர் பெரியசாமியை தேடி வருகின்றனர்.

போடி அருகே உள்ள எர்ணம்பட்டியை சேர்ந்த கணேசன் மகன் சந்திரபோஸ் 34. இவர் 2024 ஆக.29ல் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்திற்கு பட்டா மாறுதலுக்காக சென்றார். தாலுகா அலுவலகத்திற்கு வெளியில் மனு எழுதிக் கொடுத்து கொண்டிருந்த உத்தமபாளையம் நகர் ஹிந்து முன்னணித் தலைவர் பெரியசாமி 40, 'தன்னை துணை தாசில்தார்', என்றும், 'பட்டா மாறுதலுக்கு செலவாகும்' எனக்கூறி, மாவட்ட ஹிந்து இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ராம்செல்வாவிடம் அழைத்து சென்றுள்ளார்.

அங்கு, ராம்செல்வா 'தன்னை தாசில்தார்' என கூறியுள்ளார். இதையடுத்து பட்டா மாறுதலுக்காக பல தவணைகளாக ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்தை சந்திரபோஸ் வழங்கினார். பணத்தை பெற்றவர்கள் பட்டா மாறுதல் செய்து தரவில்லை.

பணத்தை திருப்பிக் கேட்டதற்கு மிரட்டல் விடுத்துள்ளனர். சந்திரபோஸ் உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இருவர் மீதும் மோசடி வழக்குப்பதிந்து, ராம்செல்வாவை, கைது செய்தனர். பெரியசாமியை தேடி வருகின்றனர்.

Advertisement