ஆடு விற்று குடிக்க பணம் தராத தாயை கொன்ற மகன்

பேரிகை : கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த சிகரலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பசம்மா, 53. இவருக்கு, முருகன், 25, நாகராஜ், 23, ராஜேந்திரன், 22, ஆகிய, மூன்று மகன்கள், பல்லவி, 18, பூஜா, 16, ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

பசம்மா, ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வந்தார். மூத்த மகன் முருகன் அடிக்கடி மதுபோதையில், பசம்மாவிடம் செலவிற்கு பணம் கேட்டு, தகராறு செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, முருகன் குடிப்பதற்கு, பசம்மாவிடம் பணம் கேட்டுள்ளார். பசம்மா, பணம் இல்லை எனக் கூறியதால், 'ஆட்டை விற்று பணத்தை எடுத்துக் கொள்கிறேன்' எனக்கூறி, தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை, 6:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள ஆட்டுக் கொட்டகையில், ரத்தக் காயத்துடன் பசம்மா இறந்து கிடந்தார். விசாரணையில், பசம்மாவை, முருகன் கல்லால் அடித்து கொலை செய்து விட்டு, ஒரு ஆட்டுடன் தப்பிச் சென்றது தெரிந்தது. முருகனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement