1971ல் சரண் அடைந்ததை மறந்துவிடாதீர்கள்: பாக்., ராணுவ தளபதிக்கு பலுாச் தலைவர் பதிலடி

9

இஸ்லாமாபாத்: கடந்த 1971 போரில் பாகிஸ்தான் அவமானகரமான தோல்வியடைந்து சரண் அடைந்ததை மறந்துவிடாதீர்கள் என்று ராணுவ தளபதி அசிம் முனிர்க்கு, பலுாசிஸ்தான் தலைவரும் முன்னாள் முதல்வருமான அக்தர் மெங்கல் தெரிவித்துள்ளார்

இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971ம் ஆண்டு வங்கதேச போர் நடந்தது. இதில் பாகிஸ்தான் ராணுவ ராணுவத்தை தோற்கடித்த இந்திய ராணுவம், கிழக்கு பாகிஸ்தானாக இருந்த நாட்டை வங்கதேசமாக மாற்றி சுதந்திரம் பெற்று கொடுத்தது.

அந்த போரில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 92 ஆயிரம் பேர், இந்திய ராணுவத்திடம் சரண் அடைந்தனர்.
தற்போது வீர வசனம் பேசி வரும் பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்த சம்பவத்தை பலூச் சுதந்திர கோரிக்கையை வலியுறுத்தும் தலைவர்கள் நினைவூட்டி உள்ளனர்.

இஸ்லாமாபாத்தில் வெளிநாட்டு பாகிஸ்தானியர்கள் நடத்திய கூட்டத்தில், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனீர், பேசியபோது, பலூச் போராளிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
பலூசிஸ்தான் பாகிஸ்தானின் நெற்றியில் உள்ள சரவிளக்கு; அடுத்த பத்து தலைமுறைகள் கூட அதைப் பிரிக்க முடியாது என்று கூறியிருந்தார்.

அசிம் முனீர் பேசியதற்கு பதிலடி தரும் வகையில், பலூசிஸ்தான் தேசியக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான, சர்தார் அக்தர் மெங்கல் கூறியதாவது:

பாகிஸ்தான் ராணுவம் 1971ம் ஆண்டு அவமானகரமான தோல்வியையும் 92,000 வீரர்களின் சரணடைதலையும் ஒருபோதும் மறக்கக்கூடாது. அவர்களின் ஆயுதங்கள் மட்டுமல்ல, அவர்களின் கால்சட்டை கூட இன்னும் அங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் ராணுவம் வரலாற்று மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் உங்கள் பேண்ட்டை கழற்றி கீழே வைத்து சரணடைந்தீர்கள். அப்படி யாரும் இதுவரை சரணடைந்ததில்லை. அத்தகைய அவமானத்தை எதிர்கொண்ட நீங்கள் அதை மறக்கலாமா?

இவ்வாறு சர்தார் அக்தர் மெங்கல் கூறினார்.

Advertisement