24 மணி நேரத்தில் 5 கொலைகள்; புள்ளி விபரத்தோடு சட்டம் ஒழுங்கு குறித்து இ.பி.எஸ்., கேள்வி!

31

சென்னை: ''தி.மு.க., ஆட்சியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நடந்த கொலைகள் சவக்குழிக்கு சட்டம் ஒழுங்கு சென்றதுக்கான சாட்சி'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., விமர்சனம் செய்துள்ளார்.


அவரது அறிக்கை: தொடர் கொலைகள்- ஜாதிய மோதல்கள்! நான்காண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சி- சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வந்த சில செய்திகள்:

* தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி சரண்யா மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை

* திருப்பத்தூர் கூத்தாண்டகுப்பம் அருகே கிணற்றில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலம் கண்டுபிடிப்பு.

* வண்டலூர் தனியார் கல்லூரி வளாகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் வெட்டிக்கொலை

* கரூர் மாவட்டம் குளித்தலையில் கோவில் திருவிழாவில் மதுபோதை ஆட்டத்தை தட்டிக்கேட்ட 12ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை.

* புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் இரு ஜாதி தரப்பினர் இடையே மோதலில் வீடுகளுக்கு தீ வைப்பு; பேருந்து கண்ணாடி உடைப்பு; 5 பேருக்கு அரிவாள் வெட்டு.

நாளையோடு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.ல, அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சராசரி நாள் எப்படி இருக்கிறது என்பதற்கு இன்றைய ஒரு நாளின் செய்திகளே சாட்சி. ஒவ்வொரு நாளும் இப்படி கொலைகளுக்கு, கலவரங்களுக்கும், சமூக அவலங்களுக்கும் இடையில் தான் நாம் வாழ்கிறோம்.

ஆனால், இது எதைப் பற்றியும் துளியும் அக்கறை இல்லாதவராய், நாலாண்டு கழிந்து விட்டது என நாளை ஒரு வீடியோஷூட் எடுத்துக்கொண்டு ஸ்டாலின் வருவார் பாருங்களேன்...!
"The Dictator" எனும் ஆங்கில படத்தின் ஹீரோவுக்கும் ஸ்டாலினுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை! எனது ஆட்சியில் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் நடக்கவில்லை என்று சட்டசபையில் சொன்னவர், இதையெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளாகக் கருதவே இல்லை என்றே தோன்றுகிறது.


"ஆக, குற்றவாளிகள் கைது" என்று சொல்வீர்களே- அதையாவது செய்து, சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று தி.மு.க., அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். தமிழக மக்களே- இனியும் இந்த ஸ்டாலின் மாடல் அரசை நம்பி எந்தப் பயனும் இல்லை; இன்னும் ஓராண்டு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள்.


2026ல் பை பை ஸ்டாலின் என்று சொல்லப்போகும் உங்களின் தீர்ப்பு மூலம் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமையும். தமிழகம் உங்களுக்கு முற்றிலும் பாதுகாப்பான அமைதிப்பூங்காவாக மீண்டும் திகழும் என்ற வாக்குறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

Advertisement