சாலையில் கிடந்த ரூ.3 லட்சத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்; குவிகிறது பாராட்டு

6

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கொள்ளையடித்த கும்பல் ரோட்டில் தவறவிட்ட ரூ.3 லட்சம் ரொக்கம், ஒரு மொபைல் போனை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் முத்துகிருஷ்ணனுக்கு பாராட்டுகள் குவிகிறது.


திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு புன்னியவாளன்புரம் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பங்கில் வள்ளியூரை சேர்ந்த முருகன்(வயது 50) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கான விற்பனை பணம் ரூ.36 லட்சத்து 6 ஆயிரத்தை முருகன் ஒரு பையில் எடுத்துக்கொண்டு மொபட்டில் வங்கி நோக்கி சென்றுள்ளார்.


அப்போது அவரை ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் வழிமறித்து பணத்தை பறித்துவிட்டு தப்பிச்சென்றது. அதில் ரூ.3 லட்சம் பணம் கீழே விழுந்தது. ஆனால் அதிர்ச்சியில் இருந்த முருகன் மொபட்டையும், செல்போனையும் கீழே போட்டுவிட்டு பணத்தை கவனிக்காமல் பெட்ரோல் பங்கிற்கு ஓடினார்.



அவர் அளித்த புகாரின்பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதனிடையே கீழே விழுந்த பணத்தை அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் முத்துகிருஷ்ணன், விபத்தில் யாரேனும் சிக்கி பணத்தை அங்கேயே விட்டு சென்று விட்டார்களோ என நினைத்து அந்த பணத்தை எடுத்து பணகுடி போலீசில் ஒப்படைத்தார்.


நேர்மையுடன் செயல்பட்ட ஆட்டோ டிரைவர் முத்துகிருஷ்ணனை, போலீசார் பாராட்டினர்.சக ஆட்டோ டிரைவர்கள் அவருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.

Advertisement