ஓரம் கட்டிய உலக நாடுகள்; சர்வதேச அளவில் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான்!

புதுடில்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பாகிஸ்தானுடன் நட்பாக இருந்த நாடுகள் கூட, கடும் வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால், சர்வதேச அளவில் அந்நாடு தனித்து விடப்படும் சூழ்நிலையில் உள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசும் போது, '' பாகிஸ்தானிடம் உள்ள அந்நிய செலாவணி குறைவதை விட அந்நாட்டின் மீதான நம்பகத்தன்மை வேகமாக குறைந்து வருகிறது,'' என தெரிவித்து இருந்தார். அவர் பேசி இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்த நாடுகள் கூட இந்தியாவிற்கு ஆதரவாக மாறி உள்ளன. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர் அமைப்பு உள்ளதால், அந்நாடு சர்வதேச அளவில் தனிமைபட்டு கிடக்கிறது.
ஒரு காலத்தில் பாகிஸ்தான் நட்பு நாடுகளாக காணப்பட்ட சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமீரேட்ஸ் உள்ளிட்ட அரபு நாடுகளும் பஹல்காம் தாக்குதலுக்கு கடும் வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இந்த நாடுகள், கடந்த 2008 ம் ஆண்டு நவ., 26ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது கண்டனம் தெரிவிக்கும் போது பயங்கரவாதிகள் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.
அரபு நாடுகளின் மாற்றம்
ஆனால், காஷ்மீர் தாக்குதல் நடந்த போது பிரதமர் மோடி சவுதி அரேபியாவில் இருந்தார். தாக்குதல் குறித்து அறிந்ததும் பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார். ஆனால், அவர் டில்லியில் தரையிறங்குவதற்கு முன்னரே, சவுதி அரேபியா, காஷ்மீர் தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும், இருநாடுகளுக்கு இடையே வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் பயங்கரவாத தாக்குதல் குறித்து குறிப்பிடப்பட்டு உள்ளதுடன், வன்முறை, பிரிவினைவாதம் மற்றும் சாமானிய மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 1965 மற்றும் 1971ல் நடந்த போரின் போது பாகிஸ்தானுக்கு மதம் மற்றும் பொருளாதாரம் அடிப்படையில் நட்பு நாடாக இருந்த சவுதி, தற்போது கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்துள்ளது அந்நாட்டிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காட்டுகிறது.
எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் சமீப காலமாக அரசு நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவின் கவலையை அந்த நாடுகளால் புறந்தள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமீரேட்சும் முதலீடு செய்வதற்கான லாபகரமான இடமாக இந்தியா மாறி உள்ளது.
இந்த நாடுகள் பாகிஸ்தானிடம் இருந்து விலகி செல்வதை கடந்த 2020ம் ஆண்டிலேயே பார்க்க முடிந்தது. காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கத்திற்கு எதிராக இந்தியாவை கண்டிக்க பாகிஸ்தான் தீர்மானம் கொண்டு வந்த போது அதனை ஏற்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆப்கன் முடிவு
ஆப்கனை ஆட்சி செய்யும் தலிபான் மற்றும் அங்கு செயல்படும் ஹக்கானி பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வந்தது. தற்போது தலிபான் ஆட்சியை இந்தியா அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தலிபான் அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. ஆப்கனும் எதிராக திரும்பி உள்ளது பாகிஸ்தானுக்கு தலைவலியை அதிகப்படுத்தி உள்ளது.
சீனாவின் நிலைப்பாடு
ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா எப்போதும் செயல்பட்டு வந்தது. இந்த தாக்குதல் நடந்ததும், இரு நாடுகளையும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள சீனா வலியுறுத்தியதுடன், பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
சீனாவின் இந்த கருத்துக்கு பின்னால் ஒரு உள்குத்து உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் ஏற்படும் மோதல் சீனாவை பாதிக்கும் அபாயம் உள்ளது. பாகிஸ்தானில், அந்நாடு செயல்படுத்தி வரும் பொருளாதார திட்டங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என நினைக்கிறது. ஏற்கனவே, பலுசிஸ்தான் பகுதியில் நடக்கும் தாக்குதல் காரணமாக, தனியார் பாதுகாவலர்களை சீனா நியமித்து உள்ளது. மேலும், பாகிஸ்தானில் சீனர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதும் அந்நாட்டிற்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அமெரிக்கா உடன் நடக்கும் வர்த்தக போர் காரணமாக, பாகிஸ்தானை முற்றிலுமாக புறந்தள்ள சீனா விரும்பவில்லை.
ஐ.நா.,வில் எதிர்ப்பு
மேலும், திங்கட்கிழமை நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் லஷ்கர் பயங்கரவாத தாக்குதலுக்கு பல உறுப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பாகிஸ்தான் கூறிய கட்டுக்கதைகளையும் நம்ப எந்த நாடுகளும் தயாரக இல்லை. சர்வதேச அளவில் தனிமைப்படும் சூழல் உள்ளதால், அடுத்து என்ன செய்வது என தெரியாமல் பாகிஸ்தான் குழம்பி போய் உள்ளது.







மேலும்
-
சென்னையில் நாளை 2 இடங்களில் போர் ஒத்திகை
-
வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட செயலாக்கம் எப்போது: இஸ்ரோ தலைவர் தகவல்
-
மாஸ்கோ சென்ற விமானத்தில் தீ; டில்லி விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம்
-
இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது: பிரதமர் மோடி மகிழ்ச்சி
-
4 மாதங்களுக்கு முடிக்கப்பட்ட பணிகளுக்கு மீண்டும் டெண்டர்: சென்னை மாநகராட்சி பெண் அதிகாரி சஸ்பெண்ட்
-
ராமநாதபுரம் அருகே எரிவாயுக்குழாயில் உடைப்பு: கசிவு சரி செய்யும் பணி தீவிரம்