சென்னையில் இன்று 2 இடங்களில் போர் ஒத்திகை

சென்னை: சென்னையில் இன்று கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் சென்னை துறைமுகத்தில் போர் ஒத்திகை நிகழ்ச்சி நடக்கும் என தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையம் தெரிவித்து உள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில், நாடு முழுவதும் நாளை போர் ஒத்திகை நடத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவை பிறப்பித்து உள்ளது.
இந்நிலையில், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி, போர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த ஒத்திகை நிகழ்ச்சி கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் சென்னை துறைமுகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. எந்த அவசரகால சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது குறித்து இந்த பயிற்சியின் போது ஆய்வு செய்யப்படும்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் செயல்படும்.இந்த போர் ஒத்திகையின் போது, மாவட்ட கலெக்டர் தலைமையிலான மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம், போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் பங்கு கொள்வார்கள். மாலை 4: 00 மணி முதல் 4:30 மணி வரை இப்பயிற்சி நடக்க உள்ளது.
இந்த பயிற்சி தொடர்பாக சம்பந்தப்பட்ட மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலர், வருவாய் பேரிடர் மேலாண்மை ஆணையர், டிஜிபி, கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் திட்ட இயக்குநர், சென்னை துறைமுகத்தின் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சம்பந்தப்பட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளன என்பதற்காக இந்த ஒத்திகை நடக்கிறது. மற்ற இடங்களில் வழக்கம் போல் பணிகள் நடக்கும். இந்த ஒத்திகையால் பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையம் தெரிவித்து உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement