சிட்டி கிரைம் செய்திகள்

மது விற்றவர்கள் கைது



அரசு அனுமதி அளித்துள்ள நேரத்தை தாண்டி, மது விற்பனை செய்வோர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் பீளமேடு மற்றும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். பீளமேடு, சவுரிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் காலை 6:00 மணிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

அங்கிருந்த, 96 மதுபாட்டில்கள், பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டதையடுத்து, அங்கிருந்த, 69 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 65 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட, ராமநாதபுரத்தை சேர்ந்த கணேசன், 56 மற்றும் சிவகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இரு சக்கர வாகனம் திருட்டு



புலியகுளத்தை சேர்ந்தவர் அக்பர் பாட்சா, 32. இவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்ப்பதற்காக சென்றார். இரு சக்கர வாகனத்தை மருத்துவமனை முன் நிறுத்தி சென்றார். உறவினரை பார்த்து விட்டு, திரும்பி வந்த போது, இருசக்கர வாகனம் திருட்டு போயிருந்தது. அவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மொபைல், பணம் பறிப்பு



கணுவாய், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சந்தோஷ், 29. இவர் கடந்த 5ம் தேதி நேர்முகத் தேர்வுக்காக வடவள்ளி, தென்றல் நகருக்கு சென்றிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் கத்தி, கட்டை போன்ற ஆயுதங்களால் சந்தோஷை தாக்கி அவரிடம் இருந்த மொபைலை பறித்தனர். தொடர்ந்து, அவரை தாக்கி, அவரின் 'கூகுள் பே' பாஸ்வேர்டை பெற்றுக்கொண்டு, பணத்தை தங்கள் கணக்குக்கு அனுப்பினர். பின்னர், சந்தோஷை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

குட்கா விற்றவருக்கு சிறை



ஆர்.எஸ். புரம் பகுதியில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறா என போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சீரநாயக்கன்பாளையம், அண்ணா நகரில் உள்ள ஒரு கடையின் அருகில் இருந்த வீட்டில், குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, பதுக்கி வைத்த அருள்ராஜை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement