ஒதுக்கீடு பலனை அனுபவித்தவர்கள் மற்றவர்களுக்கு இடம் தருவதில்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதி விமர்சனம்

புதுடில்லி: “நாட்டில் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு, ரயில் பெட்டியில் இடம்பிடிப்பது போலாகிவிட்டது,” என, உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் கடைசியாக 2016 - 17ம் ஆண்டில் நடத்தப்பட்டது. ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான, 27 சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்த, அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவை, 2021ல் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து, அங்கு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் உரிய தீர்வு கண்டு, உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ''அரசியல் ரீதியாக பின்தங்கியிருப்பது சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய நிலையில் இருந்து வேறுபட்டது. எனவே, ஓ.பி.சி.,களை அரசியல் ரீதியாக பின்தங்கியவர்களாக கருத முடியாது,'' என, வாதிட்டார்.

அப்போது பேசிய நீதிபதி சூர்யகாந்த், “நாட்டில் இடஒதுக்கீடு என்பது ரயில் பெட்டிகளில் இடம்பிடிப்பதை போலாகிவிட்டது. அதில் நுழைந்தவர்கள் மற்றவர்களை உள்ளே அனுமதிக்க விரும்புவதில்லை.

''இதுதான் தற்போதைய நிலையாக உள்ளது. இந்த வழக்கிலும் இதே கருத்து பின்பற்றப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள், அதிக வகுப்புகளை அடையாளம் காண கடமைப்பட்டு உள்ளன.

''அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய மக்கள் உள்ளனர். அவர்கள் ஏன் இடஒதுக்கீட்டின் பலனைப் பெறக்கூடாது? ஒரு சில குடும்பங்கள் மற்றும் குழுக்கள் மட்டுமே பலனைப் பெறுவது எந்த விதத்தில் நியாயம்?,” என, கேள்வி எழுப்பினார். இதையடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement