கலெக்டர் அலுவலகத்தில் குரங்குகள் அட்டகாசம்

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றி திரிவதால், பொதுமக்கள் கடும் அச்சப்படுகின்றனர்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மாதம் ஒரு முறை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும், கலெக்டர் அலுவலக வளாகத்தில், 'இ - சேவை' மையமும் செயல்பட்டு வருகிறது.

இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள், இ - சேவை மையங்களுக்கு தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

பெரும்பாலான பெண்கள், தங்கள் குழந்தைகளையும் உடன் அழைத்து வருகின்றனர்.

தவிர, மாவட்ட சமூக நலத்துறை, சர்வே அலுவலகம் போன்ற அலுவலகங்களுக்கும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான மரங்கள் இருப்பதால், குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.

அவை, கலெக்டர் அலுவலகத்திற்குள் அவ்வப்போது புகுந்து விடுவதால், அலுவலக ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.

இங்கு பொதுமக்கள் கொண்டு வரும் கை பைகளையும், உணவு பொருட்களையும் மிரட்டி பறித்துச் செல்கின்றன.

தவிர, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் உள்ள பைகளில் உணவு பொருள் உள்ளதா என தேடி சேதப்படுத்தி வருகின்றன.

எனவே, கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து, பூண்டி காப்புக் காட்டில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

Advertisement