கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் திருவள்ளூரில் சிறுவர்கள் உற்சாகம்

திருவள்ளூர்,பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாணவ - மாணவியர் உறவினர் வீடு மற்றும் சுற்றுலா செல்லுதல், கோடைக்கால பயிற்சி முகாம்களில் பங்கேற்பது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குளம் பொதுமக்கள் மற்றும் நீச்சல் வீரர்களின் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நீச்சல் குளத்தில், நீச்சல் கற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் பயிற்சி முகாம், கடந்த ஏப்., 1ம் தேதி துவங்கி, இம்மாதம் இறுதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலை - மாலை வேளைகளில், சிறுவர் - சிறுமியருக்கு தனித்தனியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு முகாமும், 12 நாட்கள் நடைபெறும். இதற்கான பயிற்சி கட்டணம் 1,770 ரூபாய். முகாமில் பங்கேற்று நிறைவு செய்வோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். தற்போது, கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள, சிறுவர்கள் பயிற்சி முகாமில் ஆர்வமாக பங்கேற்று நீச்சல் பயின்று வருகின்றனர்.