அத்திக்கடவு அவினாசி திட்டத்தில்விடுபட்ட குளங்கள் பட்டியலில் சேர்ப்பு
புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் மற்றும் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, 50க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் சேர்க்காமல் விடுபட்டுள்ளதாகவும், விடுபட்ட குளம், குட்டைகளை அத்திக்கடவு அவினாசி திட்டம்-2ல் சேர்க்க வேண்டும் என கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் நீர்வளத்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து நீர்வளத்துறை சார்பில், வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், விடுபட்ட குளம்,
குட்டைகள் அத்திக்கடவு அவினாசி திட்டம்-2ல் உத்தேச பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பதில் தெரிவித்துள்ளது.
இது குறித்து, நீர்வளத்துறை திட்டங்கள் திட்டமிடுதல் செயற்பொறியாளர் விஜயா அளித்துள்ள பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கோபி, நம்பியூர் மற்றும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விடுபட்ட குளம், குட்டைகளை அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் சேர்க்க கோரப்பட்டது. மனுவில் கோரப்பட்டுள்ள குட்டைகளில், நம்பியூர் ஒன்றியத்தில் உள்ள எட்டு ஊராட்சி குட்டைகள் திட்டம் 1ல் பயன் பெற்று வருகிறது.
மேலும் மனுவில் குறிப்பிட்டுள்ள குட்டைகளில், 12 தனியாரிடம் உள்ள பட்டா குட்டைகளாக கண்டறியப்பட்டது. இவற்றில் பட்டா குட்டைகள், அரசுக்கு ஒப்படைக்கும் பட்சத்தில் அத்திக்கடவு அவினாசி திட்டம் 2ல் உத்தேச பட்டியலில் இணைத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மீதமுள்ள குளம், குட்டைகள் அத்திக்கடவு அவிநாசி திட்டம் 2ல் உத்தேச பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.