பட்டா இடங்களை அரசு புறம்போக்கு என பதிவேற்றியதால் பரிதவிப்பு

போடி: போடியில் தனி நபர்கள் பட்டா இடங்களை வருவாய் துறையினர் கம்ப்யூட்டரில் தவறுதலாக சர்க்கார் புறம்போக்கு என பதிவு செய்ததால் புதிதாக இடம், வீடு, வாங்க, விற்க முடியாமல் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதவித்து வருகின்றனர்.
போடி நகராட்சியில் தனி நபர்களின் பட்டா இடம், வீடு சர்வே எண்களை 2018 ல் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணி வருவாய் துறை மூலம் ஒப்பந்த முறையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்த போது பட்டா இடம் என்பதற்கு பதிலாக சர்க்கார் புறம் போக்கு என தவறுதலாக பதிவு செய்துள்ளனர். இதனை அப்போது இருந்த அதிகாரிகள் சரி பார்க்காமல் ஒப்புதலும் வழங்கி உள்ளனர். ஆன்லைன் மூலம் சர்வே எண்ணை பதிவிட்டு பதிவு இறக்கம் செய்தால் பட்டா உள்ள வீடு மற்றும் இடங்கள் சர்க்கார் புறம் போக்கு என உள்ளது. சர்க்கார் புறம் போக்கு என பதிவாகியுள்ளதால் நகராட்சி பகுதியில் இடம், வீடு உள்ளவர்கள் வீடு கட்ட அனுமதி பெறவும், சொத்தை விற்பனை செய்ய முடியாமலும், வங்கியில் கடன் பெற முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
சர்க்கார் புறம் போக்கு என தவறுதலாக பதிவேற்றம் செய்ததை (ரயத்துவாரி மனை, ரயத்துவாரி நிலம்) பட்டா என மாற்றி வழங்குமாறு மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுப்பதில் வருவாய் துறையினர் சுணக்கம் காட்டி வருகின்றனர். இதனால் மக்கள் பல்வேறு வகையில் சிரமம் அடைந்து வருகின்றனர்.
திருத்தம் செய்யும் பணி துரிதம்
இது குறித்து போடி தாசில்தார் சந்திரசேகர் கூறுகையில், 'பட்டா இடங்களை சர்க்கார் புறம் போக்கு என சில ஆண்டுகளுக்கு முன்பு தவறுதலாக கணினியில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால் 6 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருத்தம் செய்வதற்கான பணிகள் துரிதப்படுத்தி தற்போது முடியும் நிலையில் உள்ளது. வரும் மாதத்திற்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய பட்டா கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது என்றார்.