சாக்கடை வசதி இன்றி வீடுகளுக்கு அருகில் தேங்கும் கழிவு நீர் தேனி பாலன்நகர் விரிவாக்கப்பகுதி குடியிருப்போர் அவதி

தேனி: தேனி நகராட்சிக்குட்பட்ட பாலன் நகர் விரிவாக்க பகுதியில் கழிவு நீர் செல்ல வசதி செய்யாமல் ரோடு அமைத்துள்ளதால் வீடுகளுக்கு முன் கழிவு நீரை குளம் போல் தேக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நகராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என குடியிருப்போர் குமுறுகின்றனர்.தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட மூன்றாவது வார்டில் ஆறுமுகம் தெரு, கட்டளைகிரி தெரு, தெற்கு புதுத்தெரு, நேருஜிதெரு, கக்கன்ஜி காலனி, மட்டன்ஸ்டால் வடக்கு புதுத்தெரு, பாலன் நகர் மற்றும் விரிவாக்க பகுதிகள் உள்ளன. இதில் பாலன் நகர் விரிவாக்க பகுதியில் 35க்கும் மேற்பட்ட வீடுகளில் 150க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இப் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றியும், இன்னல்களை இப்பகுதி குடியிருப்போர் அனுபவித்து வருகின்றனர்.குடியிருப்போர்கள் முத்து மாரியப்பன், முருகன், சரவணக்குமார், வெங்கடேசன், ரோஹித் ஆகியோர் கூறியதாவது: குடியிருப்பு பகுதியில் ஓராண்டிற்கு முன் நகராட்சி சார்பில் ரோடு அமைத்தனர். கழிவு நீர் செல்ல சாக்கடை வசதி செய்த பின் ரோடு அமைக்க கூறினோம். ஆனால், நகராட்சி அதிகாரிகள் எங்கள் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் ரோடு மட்டும் அமைத்தனர். தற்போது கழிவுநீர் கடந்த செல்ல வழியில்லாததால் வீடுகளுக்கு முன், குழி தோண்டி கழிவு நீர் தேக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தேங்கிய கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகள், முதியவர்கள் வரை கொசுக்கடியால் பாதிக்கப்படுகினறனர். குடியிருப்புகள் உருவாகி பல ஆண்டுகள் ஆகியும் தெருவிளக்கு வசதி செய்யவில்லை. இதனால் இரவில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.சில வீடுகளில் திருட்டு சம்பவங்களும் அரங்கேறி உள்ளது. போலீசில் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை. தெருவில் வெளிச்சமின்றி உள்ளதால் இரவு 7:00 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படும் நிலை உள்ளது.
துரத்தும் தெருநாய்கள்
இப்பகுதியில் தெரு ஓரங்களில் சிலர் இரவில் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். இதனால் தெருநாய்கள் அதிகரித்துள்ளது. பகலில் குழந்தைகள் வெளியில் சென்றால் கூட துரத்துகின்றன. சில தெருநாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நகராட்சி குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. இதனால் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள போர் தண்ணீரை குடிக்கும் நிலை உள்ளது. போர் இல்லாத வீடுகளில் வசிப்பவர்கள் வெகுதுாரம் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
நகராட்சி அதிகாரிகள் சாக்கடை வசதி, தெருவிளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் உள்ள தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக விரோதிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் இரவில் ரோந்து பணி செய்து கண்காணிக்க வேண்டும் என்றனர்.