கணவன்,மனைவி சண்டை பஸ் கண்ணாடி உடைப்பு

தேவதானப்பட்டி,: அரசு பஸ்சில் தகராறு செய்து பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நபர் பஸ் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பினார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், குள்ளப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் 32. அரசு போக்குவரத்து கழக சத்தியமங்கலம் டெப்போ கண்டக்டர். இதே பகுதியைச் சேர்ந்தவர் டிரைவர் வெற்றிவேல் 31. தேனியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி அரசு பஸ் செல்லும்போது, தேனியிலிருந்து திருப்பூருக்கு டிக்கெட் வாங்கிய 28 வயதுடைய வடமாநில இளைஞர், 25 வயது பெண் ஒருவர், கணவன், மனைவியாக பஸ்சில் ஏறினர். பஸ் கிளம்பும் போது இவர்களுக்கு இடையே சண்டை துவங்கியது. பெரியகுளத்திலிருந்து தேவதானப்பட்டி செல்லும் வழியில் வாய் சண்டையின் வேகம் அதிகரித்தது. கண்டக்டர், டிரைவர்அமைதியாக வருமாறு அறிவுறுத்தியும் சண்டை ஓய்ந்தபாடில்லை. இவர்கள் பயணிகளையும் அவதூறாக பேசினர். தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இவர்களை ஒப்படைப்பதற்கு டிரைவர், கண்டக்டர் முடிவு செய்தனர். இதனையறிந்த மர்மநபர் வேகத்தடையில் இறங்கி கல்லால் பஸ் பின்புறம் கண்ணாடியை உடைத்து விட்டு ஓடினார். இதன்மதிப்பு ரூ.11 ஆயிரம்.

இவருடன் உடன் சண்டையிட்டு வந்த பெண், ஓடியவர் யார் என தெரியாது என்றார். தேவதானப்பட்டி போலீசார் கேமரா பதிவு மூலம் தேடி வருகின்றனர்.--

Advertisement