போதை பொருள் விற்ற கானா நாட்டுக்காரர் கைது

பெங்களூரு : பெங்களூரில் சட்டவிரோதமாக வசித்தபடி, போதைப்போருள் விற்பனை செய்து வந்த வெளிநாட்டு பிரஜையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 52.15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எம்.எம்.டி.ஏ., கார், பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவை சேர்ந்தவர் ஓவ்சு காலின்ஸ் கானியன், 35. இவர், சில ஆண்டுகளுக்கு முன், பெங்களூருக்கு மருத்துவ விசாவில் வந்திருந்தார்.

எம்.எம்.டி.ஏ., உள்ளிட்ட போதைப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து, இங்கு அதிக விலைக்கு விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்தார். இதையறிந்த மாரத்தஹள்ளி போலீசார், அவரை கடந்த ஆண்டு கைது செய்து, நாடு கடத்தினர்.

அவரோ பெங்களூருக்கு சட்டவிரோதமாக சில மாதங்களுக்கு முன் வந்து, மீண்டும் போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் கிடைத்து கொத்தனுார் போலீசார், கொத்தனுார் பகுதியில் இருந்த அவரை நேற்று பிடித்தனர். அவரிடமிருந்து 52.15 லட்சம் மதிப்புள்ள 414 கிராம் எம்.எம்.டி.ஏ., போதைப்பொருள், கார், பைக், எடை இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர் கைது செய்யப்பட்டார்.

Advertisement