சுகாஸ் ஷெட்டி கொலையில் போலீஸ் ஏட்டுக்கு தொடர்பு?

மங்களூரு :பஜ்ரங் தள் தொண்டர் சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கில், பஜ்பே போலீஸ் ஏட்டுக்கு தொடர்பு இருப்பதாக ஹிந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

பஜ்ரங் தள் தொண்டரான சுகாஸ் ஷெட்டி, கடந்த 1ம் தேதி மங்களூரு பஜ்பே அருகே கின்னிபதவு பகுதியில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பஜ்பே போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றும் ரஷீத் என்பவருக்கு சுகாஸ் கொலையில் தொடர்பு இருப்பதாக, ஹிந்து ஜாக்ரன வேதிகே தலைவர் கே.டி.உல்லாஸ், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சரண் பம்ப்பெல் கூறி உள்ளனர்.

இதுதொடர்பாக இருவரும் கூட்டாக அளித்த பேட்டி:

சுகாஸ் ஷெட்டி பஜ்பேயில் வாடகை வீட்டில் வசித்தார். பஜ்பே போலீஸ் நிலைய ஏட்டு ரஷீத், சுகாஸை விசாரணை என்ற பெயரில் அடிக்கடி போலீஸ் நிலையம் அழைத்து துன்புறுத்தினார்.

கடந்த வாரம் கேரள வாலிபர் அஸ்ரப் கொலை செய்யப்பட்ட பின், சுகாஸை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்த ரஷீத், 'உன் காரில் ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது; கூட்டாளிகளை அழைத்துச் செல்லக் கூடாது; வெளியே சுற்றக் கூடாது' என்று மிரட்டி உள்ளார்.

சுகாஸ் கொலை செய்யப்பட்டபோது, தற்காப்புக்காக கூட அவரது காரில் எந்த ஆயுதமும் இல்லை.

சுகாஸிடம் எந்த ஆயுதமும் இல்லை என்று கொலையாளிகளுக்கு, ரஷீத் தகவல் கொடுத்துள்ளார். இந்த வழக்கை என்.ஐ.ஏ., விசாரித்தால் தான் அனைத்து உண்மையும் வெளிவரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement