காஞ்சி மாநகராட்சியில் 60 சதவீதம் காலி பணியிடம் 60/102: விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் திணறல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், நகரமைப்பு பிரிவு உட்பட 60 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசியல் வாதிகளின் தொல்லையால் அதிகாரிகள் லீவு எடுத்து செல்வதும், பணியிட மாற்றலாகி செல்வதும் தொடர்வதால், விதிமீறல் கட்டடம் தொடர்பான நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் எழுகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம், கடந்த 2021 ல், பெருநகராட்சி நிலையில் இருந்து தரம் உயர்ந்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்ந்து, மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், மொத்தமுள்ள 102 பணியிடங்களில், 60 பணியிடங்கள் இன்னமும் காலியாகவே இருப்பதால், மாநகராட்சியின் வளர்ச்சி பணிகள் பாதிக்கும் சூழல் தொடர்கிறது.
அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டிய நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனரகம் அமைதியாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
குறிப்பாக, நகரமைப்பு பிரிவில், ஒரு நகரமைப்பு அலுவலர், மூன்று நகரமைப்பு ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பியிருக்க வேண்டும். ஆனால், இந்த நான்கு பணியிடங்களுமே இப்போது காலியாக இருப்பதால், நகரமைப்பு பிரிவு அலுவலர்களும், கட்டட அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் நகரவாசிகளும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கட்டட அனுமதி ஆன்லைன் முறையில், சுய சான்றிதழ் முறையில் அரசு மாற்றியுள்ளது. இருப்பினும், இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யவும், கோப்புகளில் கையெழுத்து இடவும், சம்பந்தப்பட்ட கட்டட இடங்களை நேரில் ஆய்வு செய்யவும் அதிகாரிகள் இல்லாதது கோப்புகள் தேக்கம் ஏற்படுத்துவதாக புகார் எழுகிறது.
இதுமட்டுமல்லாமல், நகரில் தொடர்ந்து முளைக்கும் விதிமீறல் கட்டடங்களை ஆய்வு செய்யவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும், நகரமைப்பு அலுவலர், ஆய்வாளர்கள் இல்லாதது, விதிமீறல் செய்வோருக்கு சாதகமாக அமைகிறது.
நகரமைப்பு பிரிவுக்கு பணியிட மாறுதலில் வரும் ஆய்வாளர்கள், அலுவலர்கள் சொற்ப நாட்களே பணியாற்றுகின்றனர். உடனடியாக விடுப்பு எடுத்து செல்வதும், பணியிட மாறுதல் பெற்று செல்வதும் தொடர்கிறது. அவ்வாறு பல அதிகாரிகள் இப்பிரிவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் மாறிவிட்டனர். கடந்த ஜனவரி மாதம் எந்த அதிகாரிகளும் இன்றி இப்பிரிவு செயல்பட்டதால், பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.
இதனால், காஞ்சிபுரத்திற்கு கணேச ரங்கன் என்ற நகரமைப்பு அலுவலர், கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ஒரு மாதமே இவர் பணியாற்றிய நிலையில், அவரும் விடுப்பு எடுத்து சென்று விட்டதால், கடந்த ஒரு மாதமாகவே நகரமைப்பு அலுவலர், ஆய்வாளர்கள் இன்றி வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன.
மாநகராட்சி கமிஷனர் நவேந்திரனிடம் கேட்டபோது, 'ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து இயக்குனரகத்திடம் தெரிவித்துள்ளோம். விரைவாக பணியிடங்களை நிரப்புவதாக தெரிவித்துள்ளார். அதுவரை பொறுப்பு அதிகாரியை நியமிக்கவும் கேட்டுள்ளோம். விரைவாக நியமிக்கப்படுவார்கள்' என்றார்.
மேயர் மகாலட்சுமியிடம் கேட்டபோது, 'மாநராட்சியில் உள்ள காலியிடங்கள் குறித்து, நகராட்சி நிர்வாகத்துறையிடம் ஏற்கனவே கேட்டு வருகிறோம். நகரமைப்பு பிரிவில் உள்ள காலியிடம் குறித்து அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளோம். விரைவாக நகரமைப்பு பிரிவு அதிகாரிகளை நிரப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின், மாநகராட்சிக்கு என, நான்கு மண்டலங்களுக்கும் தனித்தனியாக நகரமைப்பு அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அதுபோல் நியமிக்கப்படவில்லை. மாநகராட்சியில் இயங்கும் நகரமைப்பு பிரிவுக்கே அதிகாரிகள் இல்லாததால், மொத்த கோப்புகளும் அங்கேயே குவிகின்றன. கட்டட அனுமதி, வீட்டுமனை அனுமதி, விதிமீறல் கட்டட நடவடிக்கை என பல்வேறு விவகாரங்களும் இந்த அலுவலகத்திலேயே கவனிக்கப்படுகின்றன.
இப்பிரிவுக்கு வரும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையே ஏற்படும் பிரச்னை தான், அதிகாரிகள் தாக்குபிடிக்காமல் ஓடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. லே-அவுட் அங்கீகரிப்பு, வணிக ரீதியிலான கட்டட அனுமதி போன்றவைக்கு பெரிய அளவிலான தொகை கைமாறுவதில் ஏற்படும் சலசலப்புதான் அதிகாரிகளுக்கு தொல்லையாக மாறுகிறது. அதிகாரிகளுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் இடையே கமிஷன் பிரிப்பதில் உள்ள பிரச்னை அதிகமாகி பணியிட மாற்றம் கேட்டு செல்கின்றனர். அல்லது லீவு எடுத்து செல்வது வாடிக்கையாக மாறிவிட்டது.