பாக்., தாக்கினால் உரிய பதிலடி தரப்படும்: தோவல் உறுதி

6


புதுடில்லி: '' தாக்குதலை தீவிரப்படுத்தும் எண்ணம் இந்தியாவிற்கு இல்லை. அதேநேரத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், அதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்,'' என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார்.


பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பல நாட்டு தேசிய ஆலோசகர்களுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.


அமெரிக்காவின் மார்கோ ரூபியோ, பிரிட்டனின் ஜோனாதன் பாவெல், சவுதியின் முசியாத் அல் அபியான்,ஐக்கிய அரபு எமீரேட்சின் எச் எச் ஷேக் தஹ்நூன், யுஏஇ.,யின் தேசிய பாதுகாப்பு குழு செயலாளர் அலி அல் ஷம்சி,ஜப்பானின் மசடாகா ஒகானோ ஆகியோருடன் தோவல் ஆலோசனை மேற்கொண்டார்.


மேலும், ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செரஜி ஷியோகு, சீனா வெளியுறவு அமைச்சர் வாங்யீ, பிரான்ஸ் அதிபரின் தூதரக ஆலோசகர் இமானுவேல் போனே ஆகியோருக்கும் தாக்குதல் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.


இந்த ஆலோசனையின் போது, இந்தியா எடுத்த நடவடிக்கை, அதனை செயல்படுத்திய விதம் குறித்து அஜித் தோவல் விளக்கம் அளித்தார். இந்தியாவின் நடவடிக்கை கட்டுப்பாட்டுடன் எடுக்கப்பட்டது என தெரிவித்தார். மேலும், தாக்குதலை தீவிரப்படுத்தும் எண்ணம் இந்தியாவிற்கு இல்லை. பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முடிவு செய்தால், அதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என தோவல் கூறியுள்ளார்.

Advertisement