'அனைவரையும் அரவணைத்து செயல்படுங்கள்': நயினாருக்கு மோகன் பகவத் ஆலோசனை

7

சென்னை: 'அனைத்து தரப்பையும் அரவணைத்து செயல்பட்டால் சாதிக்கலாம்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் ஆலோசனை வழங்கி உள்ளார்.


கோடை விடுமுறை காலமான ஏப்ரல், மே மாதங்களில், ஆண்டுதோறும் மாநில அளவிலான பயிற்சி முகாம்களை ஆர்.எஸ்.எஸ்., நடத்தி வருகிறது.



இந்த ஆண்டு, தமிழகத்தில் கோவை, நாமக்கல் உள்ளிட்ட நான்கு இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி முகாம்கள் நடந்து வருகின்றன. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடில் உள்ள தனியார் பள்ளியில், 'கார்யகர்த்தா விகாஸ் வர்க' எனப்படும் பொறுப்பாளர்கள் மேம்பாட்டு முகாம், கடந்த ஏப்ரல் 19 முதல் நடந்து வருகிறது.


ஆர்.எஸ்.எஸ்., ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் பங்கேற்றுள்ள பயிற்சியாளர்களுக்கு வழிகாட்டுவதற்காக, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் நேற்று முன்தினம் திருச்செங்கோடு வந்தார்.


அவரை, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகன் ஆகியோர் சந்தித்து பேசினர். கடந்த ஏப்ரல் 12ல், தமிழக பா.ஜ., தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற போது, ஆர்.எஸ்.எஸ்.,சில் பாடப்படும், 'கேசவனை நாம் வணங்குவோம்; அவர் பாதையிலே நாமும் செல்லுவோம்; லட்சியத்தை எய்து காட்டுவோம்.


'நாம் நிச்சயமாய் வெற்றி நாட்டுவோம்' என்ற பாடலை பாடினார். இதில், கேசவன் என்பது ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் கேசவ பலிராம் ஹெட்கேவாரை குறிக்கிறது. அதாவது, அ.தி.மு.க.,வில் இருந்து வந்திருந்தாலும், ஆர்.எஸ்.எஸ்., வழியில் செல்வேன் என்பதை சூசகமாக நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், திருச்செங்கோடு வந்த மோகன் பகவத்தை சந்தித்துள்ளார். அப்போது கேசவ விநாயகன் உடனிருந்தார். தமிழக அரசியல் சூழல் குறித்து கேட்டறிந்த மோகன் பகவத்திடம், 'அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணி உருவான பின், ஆளும் தி.மு.க., கூட்டணிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.


'அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணிக்கு, மேலும் பல கட்சிகள் வரும் வாய்ப்பு உள்ளது. அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்' என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ., வளர்ச்சிக்கான தன் செயல் திட்டத்தையும் விவரித்து உள்ளார்.


இது தொடர்பாக தயாரித்து வைத்திருக்கும் அறிக்கையையும் மோகன் பகவத்திடம் நயினார் நாகேந்திரன் கொடுத்துள்ளார். அதோடு, தமிழகத்தில் மாவட்டங்கள் மற்றும் மாநில அளவுக்கான பா.ஜ., நிர்வாகிகள் தேர்வு குறித்தும், நீண்ட நேரம் விவாதித்து ஆலோசனைகள் பெற்றுள்ளார்.


இப்படி, கட்சியின் நிகழ்கால மற்றும் எதிர்காலம் குறித்த செயல்பாடுகள் அனைத்தையும் விவரித்த நயினாரின் கருத்துகளை கேட்டுக் கொண்ட மோகன் பகவத், 'தலைவர் பதவியை ஒரு பொறுப்பாக எடுத்துக் கொண்டு, அனைத்து தரப்பையும் அரவணைத்து செல்லுங்கள்.


'பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களிடமும் கட்சியை வேகமாக கொண்டு செல்லுங்கள். அப்படி செய்யும்பட்சத்தில், அது வரும் சட்டசபை தேர்தலிலேயேகூட நல்ல பலனை கொடுக்கலாம்' என ஆலோசனை வழங்கியதாக, பா.ஜ., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement