பயங்கரவாதி மசூத் அசாரை கதறவிட்ட இந்தியா; 25 ஆண்டுக்கு பின் வீடு தேடி சென்று பழி தீர்த்தது

காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில், 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட மறுநாள், பீஹாரில் பிரதமர் மோடி பேசுகையில், 'தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு, தண்டனை தருவோம்' என, உறுதிபட தெரிவித்தார்.
அவர் கூறியது போல், சரியாக 15வது நாள், பயங்கரவாதிகளின் கூடாரத்தில் துல்லிய தாக்குதல் நடத்தி, கதற வைத்து வருகிறது இந்தியா. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம், ஆப்ரேஷன் சிந்துார் என, அதிரடியாக பாகிஸ்தானை கதிகலங்க வைத்துள்ளது இந்தியா.
''எனது குடும்பத்தில் 10 பேர், கூட்டாளிகள் நான்கு பேரை கொன்றுவிட்டார்களே... வருத்தம் இல்லை; விரக்தி இல்லை; அவர்கள் இறக்கவில்லை; தியாகிகள்' என, சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரை கதற வைத்துள்ளது இந்தியா. அசாரின் மூத்த சகோதரி, அவரது கணவர், அவரது மருமகன் மற்றும் மனைவி, மற்றொரு மருமகள் என நெருங்கிய சொந்தங்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தி, அப்பாவி மக்களையும், ராணுவ அதிகாரிகளையும் கொன்று குவித்தவன் மசூத் அசார். இன்று அந்த பயங்கரவாதியின் வீடு புகுந்து யாரும் எதிர்பார்க்காத வகையில், தாக்குதல் நடத்தியது நமது பாதுகாப்பு படை. இது ஒவ்வொரு பயங்கரவாதிக்கும், பாடமாக இருக்கும்.

விமானம் கடத்தல்
கடந்த 1999ம் ஆண்டு, டிச.,24ல் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டில்லி புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், 'ஹர்கத் உல் முஜாகிதீன்' அமைப்பைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. விமானத்தில், 179 பயணியர் மற்றும் 11 பணியாளர்கள் இருந்தனர்.
விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள், விமானத்தில் இருந்த ஒருவரை குத்திக் கொன்றனர். கடத்தப்பட்ட விமானம், அமிர்தசரஸ், லாகூர், துபாய் மற்றும் பின்னர் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹாருக்கு சென்றது.
பணயக்கைதிகளாக இருந்த விமான பயணியரை காப்பாற்ற வேண்டும் எனில், அதற்கு ஈடாக, இந்திய சிறையில் இருக்கும் மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அவ்வாறு விடுவிக்கப்பட்ட கைதிகளில் ஒருவன் தான், இந்த மசூத் அசார்.
பார்லிமென்ட் தாக்குதல்
கடந்த 2000ம் ஆண்டில், 'ஜெயஷ்-இ-முகமது' என்ற பயங்கரவாத அமைப்பை, மசூத் அசார் நிறுவினான். 2001ம் ஆண்டு, டில்லி பார்லிமென்டில் நடந்த தாக்குதல், 2016ல், காஷ்மீர் பதான்கோட் தாக்குதல் மற்றும் 2019ல் புல்வாமா தாக்குதல் என, இந்திய மண்ணில் அரங்கேறிய கொடிய தாக்குதல்களுக்கு இவன் தான் முக்கிய காரணம்.
இந்தியாவுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நடத்த, பாகிஸ்தான் அவனுக்கு அடைக்கலம் அளித்தது. அன்று இந்தியாவில் இருந்து, 'உயிர் பிச்சை' வாங்கிச் சென்றவனை, 25 ஆண்டுகளுக்குப் பின், இந்தியா தேடி பழி தீர்த்துள்ளது. முதல் கட்டமாக, 10 உறவினர்கள், நான்கு உதவியாளர்களை தீர்த்துக்கட்டியுள்ளது. தற்போது எங்கோ, பயத்துடன் பதுங்கி வாழும் மசூத் அசாரின், நாட்களும் எண்ணப்பட்டுள்ளன.
ஐ.நா.,வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர், ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார். கடந்த, 2000ல் அவர் துவக்கிய ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்புக்கு, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. நம் நாட்டின் பார்லிமென்டில், 2001ல் நடந்த தாக்குதல், 2016ல் பதன்கோட் விமான தளத்தில் நடந்த தாக்குதல், 2019ல் புல்வாமாவில் 40 சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் உயிரிழப்புக்கு காரணமான தாக்குதல்களில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டது. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தான், மசூத் அசார்.
கடந்த, 1994ல் இவர் காஷ்மீரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரை விடுதலை செய்வதற்காக, 1999ல், நேபாளத்திலிருந்து டில்லி சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை, பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் காந்தகாருக்கு கடத்திச் சென்றனர். அதில் உள்ள பயணியரை விடுவிக்க வேண்டும் என்றால், மசூத் அசாரை விடுவிக்க வேண்டும் என பயங்கரவாதிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மசூத் அசார் பயங்கரவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்வதாக பாகிஸ்தான் அரசு உறுதி அளித்தாலும், பாகிஸ்தானில் அவர் தொடர்ந்து சுதந்திரமாக நடமாடி வருகிறார்.
-நமது நிருபர்-










மேலும்
-
பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி காவிரி ஆற்றில் சடலமாக கண்டெடுப்பு!
-
சென்னையில் பங்களா வீட்டில் தீ; வயதான தம்பதி பலி
-
மே 14,15ம் தேதி 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் கணிப்பு
-
பார்லி சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல், கார்கே கடிதம்
-
பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் பெருமை: ராஜ்நாத் சிங் பெருமிதம்!
-
இலங்கையில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து; 21 பேர் பரிதாப பலி