தங்கம் பூமிக்கு வந்தது எப்படி?

'நாசா'வின் மூத்த ஆய்வாளரான டாக்டர் பாவ்னா லால், பல கோடி ஆண்டுகள் பழமையான மர்மம் ஒன்றை விடுவிக்க உதவியுள்ளார்.

அதாவது, பேரண்டம் உருவான போதே, தங்கம் தோன்றிவிட்டது. ஒரு புதிய ஆய்வில், அவரும் அவரது சகாக்களும் தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற கனமான தனிமங்கள், பூமி உருவாகும் முன்பே நிகழ்ந்த பண்டைய நிகழ்வுகளான நியூட்ரான் நட்சத்திரங்களின், கொடூரமாக மோதி இணைந்த போதே உருவானதைக் கண்டறிந்துள்ளனர்.

ஈர்ப்பு அலை ஆய்வகங்கள் மற்றும் விண்வெளி தொலைநோக்கிகளில் இருந்து கிடைத்த தரவுகளைப் பயன்படுத்தி 'லால் குழுவினர்' ஆய்வு செய்தனர். பேரண்டத்தில் நிகழ்ந்த கொடூர மோதல்கள், எப்படி தங்கம் போன்ற உலோகங்களை, விண்மீன் திரள் முழுவதும் சிதறடித்தன என்பதை லாலின் குழு மறுசித்திரிப்பு செய்து காட்டியுள்ளது.

பல யுகங்களாக, இந்த நட்சத்திர குப்பைகள், வாயு மேகங்களுடன் கலந்து, இறுதியில் கோள்களாக இறுகின. அதன் பின்னர், அரிய உலோகங்கள் நகைகள், மின்னணுவியல் பொருட்கள் மற்றும் நாணயங்களாக உருமாறியுள்ளன.

இந்தக் கண்டுபிடிப்பு முந்தைய கருதுகோள்களுடன் ஒத்துப்போவதோடு, முக்கியமான விவரங்களையும் சேர்த்துள்ளன. பூமியின் மதிப்புமிக்க உலோகங்களில் கணிசமான பகுதி, சில ஆதிகால மோதல்களிலினால் தோன்றியிருக்கலாம் என்று காட்டுகின்றன.

நினைத்துப் பாருங்கள், திருமண மோதிரத்தில் உள்ள தங்கம், நமது சூரிய குடும்பத்திற்கு வெகு தொலைவில் உள்ள ஒரு அண்டப் பெரும்புயலில் பிறந்திருக்கலாம். டாக்டர் லால் கூறுவது போல, 'நம்மிடமுள்ள மதிப்புமிக்க பொருட்களுக்கு, மிகவும் கண்கவர் தொடக்கங்கள் இருந்திருக்கின்றன.'

Advertisement