தோனி மனம் உருகுதே: பெருகும் ரசிகர்கள் ஆதரவு

கோல்கட்டா: ''ரசிகர்கள் என் மீது அன்பும் பாசமும் வைத்துள்ளனர். செல்லும் இடமெல்லாம் சிறப்பான ஆதரவு அளிக்கின்றனர்,''என தோனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் கோல்கட்டாவை (20 ஓவர், 179/6), சென்னை அணி (19.4, 183/8) வென்றது. கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டன. ரசல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட கேப்டன் தோனி, ஆறுதல் வெற்றி தேடித் தந்தார். இவருக்கு சேப்பாக்கம் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மைதானங்களிலும் ரசிகர்கள் உற்சாகம் அளிக்கின்றனர். ஈடன் கார்டனிலும் மஞ்சள் படையை காண முடிந்தது.
இது பற்றி 'தல' தோனி கூறியது: எனத்து 43 வயதாகிறது. நீண்ட காலம் விளையாடிவிட்டேன். கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி காலத்தில் இருக்கிறேன் என்ற உண்மையை மறைக்க முடியாது. பெரும்பாலான ரசிகர்களுக்கு, எது எனது கடைசி போட்டி என்பது தெரியாது. இதனால் என் ஆட்டத்தை காண ஆர்வத்துடன் வருகின்றனர். என் மீது அன்பும் பாசமும் வைத்துள்ளனர். செல்லும் இடமெல்லாம் திரண்டு வந்து ஆதரவு தருகின்றனர்.
ஓய்வு எப்போது: இந்த தொடர் முடிந்ததும், அடுத்த 6-8 மாதங்களுக்கு கடினமாக பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதை எனது உடல் தாங்குகிறதா என்பதை பார்க்க வேண்டும். உடற்தகுதியை பொறுத்து, எதிர்காலத்தில் பிரிமியர் தொடரில் விளையாடுவது பற்றி முடிவு எடுக்கப்படும். இப்போதைக்கு ஓய்வு குறித்து எந்த முடிவும் எடுக்க போவதில்லை.இந்த ஆண்டு சென்னை அணிக்கு சில விஷயங்கள் சரியாக அமையவில்லை. இப்போது தான் மூன்றாவது வெற்றியை பெற்றுள்ளோம். இதை பற்றி பேசும் போது உணர்ச்சிவசப்படலாம். யதார்த்த நிலையை ஆராய வேண்டும். மொத்தம் உள்ள 25 வீரர்களில் சரியான நபர்களை தேர்வு செய்வது அவசியம். அடுத்த ஆண்டுக்கான அணியை கண்டறிய வேண்டும். எந்த பேட்டர், எந்த இடத்தில் பேட் செய்யலாம், சூழ்நிலைக்கு ஏற்ப யார் சிறப்பாக பந்துவீசுவார் என்பதற்கு விடை காண வேண்டும்.
மனவலிமை முக்கியம்: இம்முறை ஆரம்ப போட்டிகளில் பேட்டர்கள் ரன் எடுக்க தடுமாறினர். லீக் சுற்றில் 9 போட்டிகளில் தோற்றதால், 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்துவிட்டோம். இனி மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து, அவர்களது அணுகுமுறை, மனவலிமையை சோதிக்கலாம். பேட்டிங் நுணுக்கத்தில் கைதேர்ந்தவர்கள், அனைத்து போட்டிகளிலும் ரன் சேர்ப்பதில்லை. போட்டியின் சூழல் அறிந்து விழிப்புணர்வுடன் செயல்படுபவர்கள் மட்டுமே தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.
கோல்கட்டாவுக்கு எதிரான போட்டியில் நான் தான் கடைசி பேட்டர். இதனால் 'டென்ஷன்' அதிகரித்தது. ஷிவம் துபே இரு சிக்சர்கள் விளாசி ரன் ரேட்டை குறைக்க, வெற்றி எளிதானது.
இவ்வாறு தோனி கூறினார்.
இளம் படை தயார்
ஐந்து முறை கோப்பை வென்ற சென்னை அணி, இம்முறை சறுக்கியது. அடுத்த ஆண்டுக்கான சிறந்த அணியை தயார் செய்யும் பணியில் இறங்கியுள்ளது. எஞ்சிய போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். அஷ்வின், விஜய் சங்கர், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா போன்ற அனுபவ வீரர்கள் ஏமாற்றினர். ஆனால் இளம் நட்சத்திரங்களான ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரவிஸ், உர்வில் படேல் நம்பிக்கை தந்தனர். அதிரடியாக பேட் செய்து, சென்னை அணிக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருப்பதை உறுதி செய்தனர்.
ருதுராஜ் காயம் அடைந்ததால் 'டாப்-ஆர்டரில்' வாய்ப்பு பெற்ற ஆயுஷ் மாத்ரே, 5 போட்டிகளில் 163 ரன் (சராசரி 32.60, ஸ்டிரைக் ரேட் 181.11) விளாசினார். இதில் பெங்களூரு பந்துவீச்சை சிதறடித்து, 94 ரன் எடுத்தது சிறப்பு. கோல்கட்டாவுக்கு எதிராக டிவால்ட் பிரவிஸ் (தெ.ஆ.,) 22 பந்தில் அரைசதம் எட்டினார். வைபவ் அரோராவின் ஒரே ஓவரில் 30 ரன் விளாசிய இவர், எதிர்கால 'சூப்பர் ஸ்டாராக' அடையாளம் காட்டினார். இதே போட்டியில் உர்வில் படேல் 11 பந்தில் 31 ரன் விளாசினார்.
மேலும்
-
பஸ்சில் கடத்திய ரூ.1.66 கோடி ஹவாலா பணம் பறிமுதல்
-
டாஸ்மாக் அகற்றப்பட்ட பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை
-
கறையான் அரித்து ரூ.1 லட்சம் இழந்த பெண்ணுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நிதி
-
உணவு கழிவை சாப்பிட குவியும் மாடுகளால் விபத்து அபாயம்
-
சிறுமியை சீண்டியவர் கைது
-
வடுகாத்தை அம்மன் கோவில் குளக்கரை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை