தொழில் அதிபர்கள் வீடுகளில் 2வது நாளாக ஈ.டி., சோதனை
சென்னை:சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, சுற்றுச்சூழல் துறை முன்னாள் அதிகாரி மற்றும் தொழில் அதிபர்களின் வீடுகளில், இரண்டாவது நாளாக நேற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை, சாலிகிராமம் திலகர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். சுற்றுச்சூழல் துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
அவர் மீதான புகார்கள் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, வீட்டில் சோதனை நடத்தி, சொத்து ஆவணங்கள், தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அதில், பாண்டியன் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, சுற்றுச்சூழல் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யும் நிறுவனங்களை நடத்தி வரும் தொழில் அதிபர்கள் மீது, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில், பாண்டியன் வீடு மற்றும் சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள, தொழில் அதிபர் ஏ.கே.நாதன் வீடு, கோயம்பேடு ஜெய் நகரில் உள்ள தொழில் அதிபர் குணசேகரன் அலுவலகம், கே.கே.நகரில் உள்ள டாக்டர் வரதராஜன் வீடு என, 10க்கும் மேற்பட்ட இடங்களில், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
இந்த இடங்களில், இரண்டாவது நாளாக நேற்றும் சோதனை நடத்தப்பட்டது.