வர்த்தக துளிகள்

ஆந்திராவில் ரூ.5,000 கோடியில் எல்.ஜி., ஆலை




ஆந்திராவில், 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான எல்.ஜி., ஸ்மார்ட் ஹோம் அப்ளையன்ஸ் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆந்திராவின் ஸ்ரீசிட்டியில், அதிநவீன தொழிற்சாலைக்காக எல்.ஜி., நிறுவனம் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. அம்மாநிலத்தின் கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறைக்கான அமைச்சர் நர லோகேஷ், இந்த ஆலைக்கான அடிக்கல்லை நாட்டினார். 247 ஏக்கர் நிலத்தில் அமைய உள்ள இந்த ஆலை, 1,900 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்கும் என கூறப்படுகிறது.


இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும்போது, 8 லட்சம் பிரிஜ்கள், 8.5 லட்சம் வாஷிங் மெஷின்கள், 1.5 லட்சம் 'ஏசி'கள் மற்றும் 20 லட்சம் ஏசி கம்ப்ரசர்கள் உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு ஏசி கம்ப்ரசர்கள் உற்பத்தியும், வரும் 2029ம் ஆண்டு பிற பொருட்கள் உற்பத்தியும் துவங்க உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா இந்தியாவின் தலைவர் ராஜினாமா



டெஸ்லாவின் இந்திய தலைவர் பிரசாந்த் மேனன், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாக உள்ள நிலையில், அந்நிறுவனத்தின் இந்திய தலைவர் பிரசாந்த் மேனன் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக டெஸ்லாவில் பணிபுரிந்து வரும் மேனன், டெஸ்லா இந்தியாவின் தலைவராக நான்கு ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.
கடந்த 2021ல், புனேவில் இந்திய அலுவலகத்தை அமைத்தார். டெஸ்லா இந்தியாவிற்கு தலைமை பொறுப்பை ஏற்பதற்கு முன், அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். மேனன், தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரது ராஜினாமாவை அதிகாரப்பூர்வமாக டெஸ்லா இன்னும் அறிவிக்கவில்லை.

நிதியமைச்சக உதவியை கோரவில்லை: என்.எஸ்.இ.,



ஐ.பி.ஓ.,வுக்கான அனுமதி வழங்குவதை செபி தாமதப்படுத்துவது தொடர்பாக, நிதியமைச்சகத்தின் உதவியை நாடியதாக வெளியான செய்திக்கு, என்.எஸ்.இ., மறுப்பு தெரிவித்துள்ளது. ஐ.பி.ஓ., வருவதற்கான என்.எஸ்.சி.,யின் விண்ணப்பம் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.
இதற்காக செபியிடம், என்.எஸ்.இ., பல முறை முறையிட்டும், ஒருசில காரணங்களால் செபியின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, செபியிடம் இருந்து ஐ.பி.ஓ.,வுக்கான என்.ஓ.சி., எனும் தடையில்லா சான்று கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து, மத்திய நிதியமைச்சகத்தின் உதவியை நாடியிருப்பதாக வெளியான செய்தியை, என்.எஸ்.இ., மறுத்துள்ளது.

பாக்., பங்கு சந்தை தற்காலிகமாக நிறுத்தம்



பாகிஸ்தானின் கராச்சி பங்கு சந்தையின் முக்கிய குறியீடான கே.எஸ்.இ., 30, 7.20 சதவீதம் சரிவடைந்ததை அடுத்து, அதன் வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்தியது.
கடந்த ஏப்ரல் 22ம் தேதியன்று, இந்தியாவின் பஹல்காம் மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதன் எதிரொலியாக பாகிஸ்தான் பங்கு சந்தையின், கே.எஸ்.இ., 100 குறியீடு கிட்டத்தட்ட 13 சதவீதமும், கே.எஸ்.இ., 30 குறியீடு 14 சதவீதம் அளவுக்கு இதுவரை சரிவடைந்துள்ளது.

Advertisement