சத்தீஸ்கரில் அதிரடி 22 நக்சல்கள் சுட்டுக்கொலை

பிஜப்பூர்: சத்தீஸ்கரில், 'ஆப்பரேஷன் சங்கல்ப்' பெயரில் நடந்த என்கவுன்டரில், 22 நக்சல்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் மற்றும் தெலுங்கானா மாநில எல்லை வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் நக்சல்களை கூண்டோடு அழிக்கும் வகையில் கடந்த ஏப்., 21ல், 'ஆப்பரேஷன் சங்கல்ப்' என்ற நடவடிக்கை பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

பஸ்தார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பெரிய நக்சல் ஒழிப்பு நடவடிக்கையான இதில், மாவட்ட ரிசர்வ் போலீசார், சிறப்பு அதிரடிப்படையினர், இரு மாநிலங்களை சேர்ந்த போலீசார், மத்திய ரிசர்வ் போலீசார் என, 24,000 வீரர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை இரு மாநில எல்லையில் உள்ள கரேகுட்டா மலை வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் மீது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 22 நக்சல்கள் கொல்லப்பட்டனர். அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடப்பதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

சங்கல்ப் நடவடிக்கையின் போது நுாற்றுக்கணக்கான நக்சல் மறைவிடங்கள் மற்றும் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளன. வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள், மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் ஆறு பேர் காயம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement