214 புதிய பஸ்கள் இயக்கம் முதல்வர் ஸ்டாலின் துவக்கம்

1

சென்னை:அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வாங்கப்பட்ட, 214 புதிய பஸ்களின் சேவையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை தீவுத்திடலில் நடந்த நிகழ்ச்சியில், புதிய பஸ்சில் ஏறி பார்வையிட்டார். விடியல் பயணம் திட்டத்தில் பயன் பெறும் பெண்களை, பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி, ஏற்றிச் செல்ல வேண்டும் என நடத்துநர், ஓட்டுநர்களிடம் அறிவுறுத்தினார்.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் - 27, விழுப்புரம் - 114, சேலம் - 10, கோவை - 31, மதுரை - 14, திருநெல்வேலி - 18 என, 214 புதிய பஸ்கள் நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, மகேஷ், எம்.பி.,க்கள் பாலு, ஆ.ராஜா, தயாநிதி மாறன், தலைமைச் செயலர் முருகானந்தம், போக்குவரத்துத் துறை செயலர் பணீந்திர ரெட்டி பங்கேற்றனர்.


பயணியரிடம் உரையாடிய முதல்வர்




சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்க, முதல்வர் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக, வள்ளலார் நகரில் இருந்து விவேகானந்தர் இல்லம் செல்லும், '32-B' மாநகர பஸ் வந்தது. ஓமந்துாரர் பஸ் நிறுத்தத்தில் நின்ற அந்த பஸ்சில் ஏறிய முதல்வர், அதில் இலவச பயணம் செய்த பெண்களிடம் உரையாடினார்.


மகளிர் விடியல் பயண திட்டத்தால், மாதம், 2000 ரூபாய் வரை சேமிப்பதாகவும், இந்த தொகையை தங்கள் பிள்ளைகளின் படிப்பு செலவு உள்ளிட்ட இதர செலவுகளுக்கு பயன்படுத்துவதாகவும், அவர்கள் தெரிவித்தனர். அதற்காக, முதல்வருக்கு நன்றியும் தெரிவித்தனர்.

Advertisement