கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை : மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு செய்துள்ள வசதிகள் குறித்து தேனி கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கம்பம் கார்த்திகேயன் தாக்கல் செய்த பொதுநல மனு:

தேனி மாவட்டம் மற்றும் கேரளா இடுக்கி மாவட்ட எல்லைகளுக்கு இடையில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. இது தொடர்பான எல்லை பிரச்னை தமிழகம், கேரளா இடையே நிலுவையில் உள்ளது. இதனால் அக்கோவில் முறையாக பராமரிக்கப்படவில்லை. அங்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளில் திருவிழா கொண்டாடப்படுகிறது. வழிபட தமிழகம், கேரளாவிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். கோவிலை புதுப்பிக்க, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, உணவு வழங்க, திருவிழாவை சிறப்பாக நடத்தும் நோக்கில் ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.

சித்ரா பவுர்ணமி திருவிழாவையொட்டி பக்தர்களிடம் அறக்கட்டளை நன்கொடை வசூலித்தது. நிதி வசூலில் முறைகேடு நடந்துள்ளது. அறக்கட்டளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் மே 12ல் சித்ரா பவுர்ணமி விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி முழு நிர்வாக பொறுப்பையும் தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அறநிலையத்துறை கமிஷனர், தேனி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.தண்டபாணி, ஆர்.சக்திவேல் அமர்வு: பக்தர்களுக்கு செய்துள்ள வசதிகள் குறித்து, கலெக்டர் இன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

Advertisement