திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் நேரத்தை முடிவு செய்ய வல்லுநர் குழு
துாத்துக்குடி:திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் நடத்தும் நேரத்தை இறுதி செய்வதில், தொடர்ந்து சர்ச்சை இருந்து வருவதால், ஹிந்து சமய அறநிலையத் துறை வல்லுநர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலை சுற்றி, 300 கோடி ரூபாய் மதிப்பில் வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதால், கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜூலை 7ல் நடைபெறும் என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
கும்பாபிஷேகம், 16 ஆண்டுகளுக்குப் பின் நடக்க உள்ள நிலையில், கும்பாபிஷேகம் நேரம் தொடர்பாக வெவ்வேறு கருத்துகள் எழுவதால், நேரத்தை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
போத்தி என அழைக்கப்படும் கேரள நம்பூதிரிகள் தரப்பில், கோவில் கும்பாபிஷேகம் காலை 6:15 முதல் 7:00 மணிக்குள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
கும்பாபிஷேகம் நடத்தும் சிவாச்சாரியார்கள் தரப்பில், காலை 9:00 முதல் 10:30 மணிக்குள் நடத்த நேரம் குறிக்கப்பட்டுள்ளது.
கோவிலில் பாரம்பரியமாக முகூர்த்தங்களை குறித்துக் கொடுத்து வரும் திரிசுதந்திர பிராமண சமுதாய சபையினர், கும்பாபிஷேகத்தை பகல் 12:05 மணி முதல் 12:47 மணிக்குள் நடத்த, அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.
மூன்று தரப்பினரும் தனித்தனி நேரத்தைக் குறிப்பிட்டுள்ளதால் கும்பாபிஷேகம் நடத்தும் நேரத்தை முடிவு செய்ய முடியாமல் கோவில் நிர்வாகத்தினரும், அறநிலையத்துறை அதிகாரிகளும் குழப்பத்தில் உள்ளனர்.
இதனால், கும்பாபிஷேகம் நடத்தும் நேரத்தை இறுதி செய்து வழங்கும்படி, ஹிந்து சமய அறநிலையத்துறை வல்லுநர் குழுவிடம் கோவில் நிர்வாகம் சார்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் நேரம் முடிவு செய்யப்பட உள்ளது.
மேலும்
-
இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் பாகிஸ்தானால் முடியாது; சசி தரூர்
-
முப்படை தளபதிகளுடன் மோடி சந்திப்பு!
-
பயங்கரவாத முகாம்கள் அழிப்பு; புதிய வீடியோ வெளியிட்டு ராணுவம் விளக்கம்!
-
ராணுவத்திற்கு உதவ தயார்; சண்டிகரில் குவிந்த இளைஞர்கள்!
-
அரசு பள்ளியில் சாதனை
-
போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு