நீர்நிலைகளில் குளிப்பதை தடுக்க எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டுகோள் 3 நாட்களில் தண்ணீரில் மூழ்கி 8 பேர் இறந்த பரிதாபம்
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், மூன்று நாட்களில் நீர்நிலைகளில் குளிக்கும் போது, இரண்டு பெண்கள் உட்பட எட்டு பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க, ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளில் குளிப்பதை தடுக்க எச்சரிக்கை பலகை அமைத்து கண்காணிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது கோடை விடுமுறை காரணமாக, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் சிறுவர்கள் நீர்நிலைகளில் குளித்து வருகின்றனர். சிலருக்கு நீச்சல் தெரியாவிட்டாலும், தண்ணீரில் குதுகலமாக குளித்து வருகின்றனர். அவ்வாறு குளிப்பவர்கள், ஆழமான பகுதியில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
உதாரணமாக, திருவள்ளூர் அடுத்த, பூண்டி ஒன்றியம், அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து மகன் சேகர்,56. அவர், கடந்த 4ம் தேதி, பூண்டி நீர்த்தேக்கத்தில் சிறிய படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, தவறி தண்ணீரில் விழுந்தார். மறுநாள் காலை தீயணைப்பு வீரர்கள் அவர்களின் உடலை தேடி, மீட்டனர்.
ஆந்திர மாநிலம் நெல்லுார் மாவட்டம் காவாலி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் வெங்கடேசன், 14, கோடை விடுமுறைக்காக, ஊத்துக்கோட்டை தாலுகா, திருக்கண்டலம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். அவர், தன் உறவினரான சுரேஷின் மகன் ஹரீஷ், 17, என்பவருடன், கடந்த 5ம் தேதி திருக்கண்டலம் கொசஸ்தலை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலுக்கு குன்றத்துார் ஹரிஹரன் 17, அம்பத்துார் வெங்கட்ராமன், 19 மற்றும் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் வீரராகவன், 25 ஆகியோர் வேதபாராயணம் படிக்க வந்தனர். நேற்று முன்தினம் வீரராகவர் கோவில் குளத்தில் குளித்த போது, மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
அதே நாளில், ஆவடி அடுத்த மோரை கிராமத்தில், கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி, சுகுணா,23, அவரது தங்கை அஞ்சனா,17 ஆகிய இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர். இப்படி நீர்நிலைகளில் குளித்து, உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
தற்போது, கொசஸ்தலை, கூவம் மற்றும் ஆரணி ஆறுகளில் மழைநீர் தேங்கி உள்ளது. பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து புழல் ஏரிக்கு நீர் திறந்து விடப்படும் கால்வாயில் அதிகளவில் திறக்கப்பட்டு உள்ளது. அந்த கால்வாயில், பூண்டியில் இருந்து புழல் வரை உள்ள கரையோரம் வசிக்கும் பொதுமக்களும், சிறுவர், சிறுமியரும் குளிக்கும் போது, நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்து வரும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
மேலும், கிராங்களில் உள்ள ஏரி, குளங்களிலும் தண்ணீர் உள்ளதால், சிறுவர்களும், இளைஞர்களும் நீர்நிலைகளில் ஆபத்தை அறியாமல் குளித்து வருகின்றனர். இதனால், ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க, மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறையினர் நீர்நிலைகளில் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். காவல்துறையினரும் நீர்நிலைகளில் குளிப்பதை தடுக்க பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோடை விடுமுறை காரணமாக பள்ளி சிறுவர்களும், இளைஞர்களும் வீடுகளில் தங்காமல், வெளியில் சுற்றித்திரிகின்றனர். சிலர் தங்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள, ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் தேங்கியுள்ள தண்ணீரில் குளித்து மகிழ்கின்றனர். பெரும்பாலோனாருக்கு நீச்சல் தெரியாவிட்டாலும், நண்பர்களின் துாண்டுதல் காரணமாக, நீர்நிலைகளுக்கு ஆர்வமாக சென்று குளித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பெற்றோருக்கு தெரியாமலும், அவர்களிடம் தகவல் எதுவும் தெரிவிக்காமல் நீர்நிலைகளுக்கு செல்கின்றனர்.
ஏரி,குளங்களில் மணல் மற்றும் சவுடு மண் மிக ஆழமாக எடுக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் அதிகளவில் தேங்கி உள்ளது. நீர்நிலைகளில் குளிக்கும் போது, ஆழமான பகுதியை அறியாமல் செல்லும் போது, நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்து விடுகின்றனர். எனவே, வீடுகளில் உள்ள சிறுவர்களையும், இளைஞர்களையும் பெற்றோர் கண்காணித்து, நீர் நிலைகளுக்கு குளிக்க அனுப்பவதை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்க வேண்டும் என, காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.