உத்தரகோசமங்கை சித்திரை பெருவிழா தேரோட்டம்; சிவ நாமம் முழங்க வடம் பிடித்தனர்

உத்தரகோசமங்கை உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

மே 2 காலை 10:00 மணிக்கு மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புறமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட பெரிய கொடி மரத்தில் கொடிபட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

மங்களேஸ்வரி அம்மன் உற்ஸவமூர்த்தியாய் தொடர்ந்து 10 நாட்களும் பல்வேறு வாகனங்களில் இரவில் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார்.

மே 9ல் மாலை கோயில் அலங்கார மண்டபத்தில் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு உற்ஸவ மூர்த்திகளான மங்களேஸ்வரி அம்மன், மங்களநாதர், பிரியா விடை உடன் கோயிலில் இருந்து தேரடி வீதிக்கு மேளதாளங்கள் முழங்க கொண்டுவரப்பட்டனர்.

50 அடி உயர பெரிய தேரில் நடுப்பகுதி இருப்பிடத்தில் சுவாமி, அம்பாள் மலர்களால் லங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் 'சிவ சிவ சங்கர' 'ஹர ஹர சங்கரா' கோஷம் முழங்கியவாறு உத்தரகோசமங்கையின் நான்கு ரத வீதிகளிலும் வடம் பிடித்து தேரை இழுத்து வந்தனர். ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். கயிலாய வாத்தியம் இசைக்கப்பட்டது.

வீடுகளில் முன்பாக நிறுத்தப்பட்டு பக்தர்கள் தேங்காய் உடைத்து பழம் நிவேதனம் வைத்து பூஜை செய்தனர். அலங்கரிக்கப்பட்ட தேர் நேற்று மாலை வந்தது. பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு கனிகள் வீசப்பட்டன.

தேரோட்டத்தை முன்னிட்டு உத்தரகோசமங்கையில் சிவனடியார்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

--

Advertisement